கேலாங்கிலிருந்து செயல்பட்ட போதைப்பொருள் கும்பல் ஒன்றை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு முறியடித்திருக்கிறது. அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில் $20,000க்கு மேற்பட்ட ரொக்கம், $218,000க்கும் அதிக மதிப்புள்ள ஒரு கிலோவுக்கும் அதிகமான 'ஐஸ்', ஒரு கிலோ பெறுமானமுள்ள 'கெட்டமின்', 'எக்ஸ்டஸி', 'எரிமின்-5' மாத்திரைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. 32 வயது சிங்கப்பூர் ஆடவரைப் பின்தொடர்ந்த அதிகாரிகள் அந்த ஆடவர் வசித்த வீட்டின் பின்வாசல் வழியாக இருவர் நுழைவதைப் பார்த்தனர்.
பின்னர் அந்த இருவரில் ஒருவரான 25 வயது சிங்கப்பூர் மாது ஒரு பழுப்பு நிறக் காதிதப்பையுடன் வெளியேறிய நேரத்தில் அதிகாரிகள் வீட்டிற்குள் புகுந்து சோதனை நடத்தினர். இருவரையும் கைது செய்தனர். மாதின் பையில் ஒரு கிலோ 'ஐஸ்', ஒரு கிலோ 'கெட்டமின்' ஆகியவை இருந்தன. மேலும் அந்த வீட்டிலிருந்து போதைபொருள், $19,200 ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. வீட்டுக்கு வந்த மற்றொருவரான 41 வயது மலேசிய ஆடவர் யூனோஸில் கைதானார். அவரிடம் இருந்து $950 ரொக்கம் கைப்பற்றப்பட்டது. அவர்களது போதைப் பொருள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து விசாரணை தொடர்கிறது.