தெருக்களைச் சுத்தம் செய்ய ஓட்டுநர் இல்லா வாகனங்கள் அறிமுகமாகலாம்

சிங்கப்பூர் தெருக்களைச் சுத்தம் செய்யவும் குப்பைகளைச் சேகரிக்கவும் ஓட்டுநர் இல்லா வாகனங்கள் அறிமுகமாகக் கூடும். இது பற்றி தொழில்துறையின் கருத்துகளை நாடும் தகவல் கோரிக்கை நடவடிக்கையை இரு அரசாங்க அமைப்புகள் நேற்று கூட்டாக அறிவித்தன. தேசிய சுற்றுப்புற வாரியமும் போக்குவரத்து அமைச்சும் வெளியிட்ட தகவல் கோரிக்கையின்கீழ், தெருக்களைச் சுத்தம் செய்யவும் பொது இடங்களில் குப்பைகளைச் சேகரிக் கவும் தானாக ஓடும் பல பயன் வாகனங்களை வடிவமைத்து உருவாக்கும் சாத்தியம் ஆராயப்படுகிறது.

“பொது இடங்களைச் சுத்தம் செய்யும் பணியின் உற்பத்தித் திறனை மேம்படுத்த புதிய தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பது பற்றி தொழில்துறை, உயர்கல்விக் கழகங்கள், ஆய்வு நிலையங்கள் ஆகியவற்றிட மிருந்து தகவல் திரட்டமுடியும் என நம்புகிறோம்,” என அமைப்புகள் வெளியிட்ட செய்தி அறிக்கை தெரிவித்தது. “பொதுச் சேவைகளின் உற்பத்தித்திறனை மேம்படுத்து வதன்மூலம், செலவையும் நேரத்தையும் நீண்டகாலத்தில் சிக்கனப்படுத்தி, மனிதவளத்தை மேம்பட்ட முறையில் பயன்படுத்த இயலும்,” என்றும் அறிக்கை குறிப்பிட்டது. பொதுத் துப்புரவு, குப்பை சேகரிப்பு சேவைகளில் நீடித்த நிலைத்தன்மையை அடைவதற்கும் புதிய தொழில்நுட்பம் அவ சியம் என்றது அறிக்கை. அரசாங்கத்தின் GeBiz இணையத்தளத்தில் வெளியிடப் பட்டுள்ள தகவல் கோரிக்கை டிசம்பர் 28ஆம் தேதி முடிவடை யும்.