யூசோஃப் இஷாக் பள்ளிவாசல் திறப்பு

சிங்கப்பூரின் முதல் அதிபரான அமரர் யூசோஃப் இஷாக்கின் பெயரில் உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் பள்ளிவாசல் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற பள்ளி வாசலின் திறப்பு விழாவில் பிரதமர் லீ சியன் லூங், முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் யாக்கூப் இப்ராஹிம், அடித்தள அமைப்புத் தலைவர்கள், சமயத் தலைவர்கள், நாடாளுமன்றத் தலைவர்கள், சிங்கப்பூரின் பல்லின சமூகத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அமரர் யூசோஃப் இஷாக்கின் மனைவி புவான் நூர் ஆய்ஷா பள்ளிவாசலை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார்.

உட்லண்ட்ஸில் அமைந்திருக்கும் யூசோஃப் இஷாக் பள்ளிவாசலின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட (இடமிருந்து வலம்) முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் யாக்கூப் இப்ராஹிம், பிரதமர் லீ சியன் லூங், அமரர் யூசோஃப் இஷாக்கின் மனைவி புவான் நூர் ஆய்ஷா, அவரது மகன் டாக்டர் இம்ரான் யூசோஃப், பள்ளிவாசலின் தலைவர் திரு அயூப் ஜொஹாரி. படம்: பெரித்தா ஹரியான்