பெண்களை காணொளி எடுத்த பெண்ணுக்கு 30 வார சிறை

உடற்பயிற்சிக் கூடத்தில் பெண்களைக் காணொளி எடுத்து அவற்றை இணையத்தில் விற்பனைக்கு விட்ட 20 வயது ஹெங் லீ யிங்கிற்கு 30 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சன்டெக் சிட்டி மாலிலுள்ள ‘ட்ரு ஃபிட்னஸ்’ கிளையில் ஒரு மேற்கத்திய பெண், அடையாளம் தெரியாத மேலும் இரு பெண்களை அவர் காணொளி எடுத்துள்ளார். 2014ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி வரையில் இணையத்தில் அந்த காணொளிகளை விற்று அவர் $1,540 சம்பாதித்துள்ளார். இரண்டு நிமிடங்களுக்கும் குறைவான அந்த காணொளிகளை குறைந்தது 22 பேருக்கு அவர் விற்றுள்ளார். நீதிமன்ற விசாரணையில் அந்த மூன்று பெண்களின் அந்தரங்கத்தை மீறி படமெடுத்த மூன்று குற்றச்சாட்டுகளை ஹெங் லீ யிங் ஒத்துக்கொண்டார். மேலும் இரு குற்றச்சாட்டுகளும் 23 ஆபாச படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டும் கவனத்தில் கொள்ளப்பட்டன.