ஆயுதம் ஏந்தி கார் திருடியவன் கைது

கத்தியைக் காட்டி மிரட்டி கார் ஒன்றைத் திருடியதாக நம்பப்படும் 27 வயது ஆடவர் கைது செய்யப் பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று அதி காலை 1 மணி அளவில் பூன் லே வேயில் நிகழ்ந்தது. காரின் உரிமையாளர் தமது நண்பருடன் இருந்தபோது சந்தேக நபர் கத்தியை ஏந்தியவாறு அவரை அணுகினான். கார் சாவியைத் தம்மிடம் தரும்படி அவன் கார் உரிமை யாளரை மிரட்டியதாக வான்பாவ் நாளிதழ் தெரிவித்தது. சம்பவம் நிகழ்ந்தபோது அருகில் இருந்த வாகனம் நிறுத்துமிடத்தில் அந்த கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக அறியப்படு கிறது. கார் உரிமையாளரிடம் சாவியை மிரட்டி வாங்கிய அந்த ஆடவர், காரை அங்கிருந்து ஓட்டிச் சென்றான். ஆனால் சிறிது நேரத்தில் காரின் கட்டுப்பாட்டை அவன் இழந்தான். சாலையின் மேட்டில் ஏறிய கார் தடம் புரண்டது. யாரோ கத்துவதும் கார் டயரின் சத்தமும் கேட்டதாக சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு அருகில் வசிக்கும் பெண் ஒருவர் வான்பாவ் நாளிதழிடம் கூறினார்.

சேதமடைந்த நிலையில் புல்தரையில் கவிழ்ந்து கிடக்கும் கார். படம்: வான்பாவ் வாசகர்