தலைவர் கேசவபாணி: நல்லிணக்கக் குழுவுக்கு மூன்று பணிகள்

சமூக, சமயச் சூழல்கள் மாறி வரும் ஒரு நேரத்தில், சிங்கப்பூரின் சமய நல்லிணக்கக் குழு குறிப் பிடத்தக்க மூன்று துறைகளில் ஒருமித்த கவனம் செலுத்தி செயல்படவேண்டும் என்று அதன் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் முன்னாள் தூதர் கே கேசவபாணி கூறியிருக்கிறார். அந்த அமைப்பு வரும் ஆண்டு களில் அரசாங்க மற்றும் அரசாங் கம் சாராத அமைப்புகளுடன் சேர்ந்து செயல்படவேண்டி இருக் கும் என்று குறிப்பிட்ட அவர், சமய சகிப்புத்தன்மையைப் போதித்து வரும் நல்லிணக்கக் குழு, சமயப் புரிந்துணர்வில் தன் னுடைய கவனத்தை மாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

பல்வேறு சமயத்தவர்களுக் கிடையே சகிப்புத்தன்மையை மட்டும் போதிப்பது இனி போதாது என்று குறிப்பிட்ட கேசவபாணி, ஒருவர் மற்றொருவரின் சமயத்தை மனப்பூர்வமாக புரிந்துகொள்ள வேண்டும் என்றும் இதைச் சாதிப்பதே இந்தக் குழுவின் நோக்கமாக இருக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார். இதனைச் செய்யவேண்டு மானால் அனைத்து சமய கலந் துரையாடல் அதிகமாக வேண்டும். ஏற்புடைய இலக்கியங்கள் அதிக மாக வெளியிடப்படவேண்டும் என்றும் அவர் கூறினார். சமய நல்லிணக்கக் குழு தங்களுடைய வட்டத்திற்குள் இல்லாதவர்களையும் எட்டி அவர் களும் சமய நல்லிணக்கத்தைப் பற்றி தெரிந்துகொள்ளுமாறு செய்யவேண்டும்.

இந்தக் குறிக் கோளை நிறைவேற்றும் வகையில் பள்ளிக்கூடங்களுக்கும் உயர் கல்வி நிலையங்களுக்கும் உரிய செயல்திட்டங்களை உருவாக்க லாம் என்றார் அவர். ஆலோசனை, சமரசம் ஆகிய பணிகளில் ஈடுபட்டுவரும் சமய நல்லிணக்கக் குழுவினர்களின் ஆற்றல்களை இளையர்களைப் பாதிக்கும் தீவிர மனப்போக்கு பிரச்சினையைச் சமாளிக்க பயன் படுத்திக்கொள்ளலாம் என்று கேசவபாணி தெரிவித்தார். சமய நல்லிணக்க அமைப்பு சிங்கப்பூரில் உருவான விதத்தை தமது உரையில் விளக்கிய அவர், கடந்த சில ஆண்டுகளாக நாடு எதிர்நோக்கும் சவால்கள் அதி கரித்து இருப்பதாக குறிப்பிட்டார்.

உலகம் முழுவதும் மொத்தமாக வும் தனிப்பட்ட முறையிலும் சமயத் தீவிரவாதம் அதிகரித்து வரு கிறது. பக்கத்து நாடுகளில் இத்தகைய சித்தாந்தங்களையும் இயக்கங்களையும் தோற்றுவிக்க முயற்சிகள் இடம்பெறுகின்றன. பிலிப்பீன்ஸ் பிரச்சினை கவலை யைத் தருகிறது. இவை எல்லாவற் றையும் இப்படியே விட்டுவிட்டால் இந்த முழு வட்டாரமும் சீர்குலைந்து விடும் என்று அவர் எச்சரித்தார்.