பூனைகளைக் காத்த நல்லுள்ளங்கள்: சங்கத்தின் $100 மதிப்புள்ள அன்பளிப்பு

சிங்கப்பூரில் பூனைகள் துன்புறுத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த போராடிய ஆறு பூனை காப்பாளர்களுக்கு நேற்று $100 மதிப்புள்ள அன்பளிப்புப் பொருள் வழங்கப்பட்டது. அவர்களில் ‘யீ‌ஷூன் 326 டாபி கேட்’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கிய திருவாட்டி ஜானட் சும்மும் ஒருவர். திருவாட்டி ஃபியோனா ஹோ, டாக்சி ஓட்டுநரான முகம்மது இலியாஸ் ஆகிய மற்றவர்களும் அந்தப் பரிசைப் பெற்றனர். அதிக போக்குவரத்துள்ள நெடுஞ்சாலையின் மத்திய பகுதியில் மாட்டிக்கொண்ட ஒரு பூனையை மீட்டது, விலங்குவதை குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளி என்று இப்போது தீர்மானிக்கப்பட்டுள்ள ஒருவருக்கு எதிராக சாட்சியம் அளித்தது முதலான பல தொண்டுகளைச் செய்து அந்த ஆறு பேரும் பூனைகளைக் காத்திருக்கிறார்கள்.

இதற்கிடையே, இந்தப் பரிசுகளை வழங்கிய பூனை நல்வாழ்வுச் சங்கத்தின் பேச்சாளர் வெரோன் லாவ், இந்தச் சங்கம் ஒவ்வோர் ஆறு மாதங்களுக்கும் ஒரு தடவை இத்தகைய அன்பளிப்பு இயக்கத்தை அமல்படுத்தும் என்று தெரிவித்தார். இந்தச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று அந்த ஆறு நல்லுள்ளங்களின் வீடுகளுக்கும் சென்று அவர்களுக்கு அன்பளிப்புப் பொருளை அளித்தனர்.

முகம்மது இலியாஸ் (வலது) தீவு விரைவுச் சாலையின் நடுப்பகுதியில் தவித்த ஒரு பூனையை மீட்டார். படம்: ஃபேஸ்புக்