கைபேசி சேவைகளை தொடங்கவுள்ள ‘மை ரிபப்ளிக்’

உள்ளூர் கண்ணாடியிழை இணையச் சேவை நிறுவனமான ‘மை ரிபப்ளிக்’, நான்காவது தொலைத்தொடர்பு உரிமத்தைப் பெறுவதில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ‘டிபிஜி டெலிகாம்’ நிறுவனத்திடம் கடந்த ஆண்டு தோல்வி கண்டாலும் அதன் தொலைத்தொடர்பு கனவுகளைக் கைவிடுவதாக இல்லை. இந்த ஆண்டு அக்டோபர் வாக்கில் கைபேசி சேவைகளைத் தொடங்குவது குறித்த தனது திட்டங்களை அறிவித்துள்ளது. தனக்கென சொந்தமான கைபேசிக் கட்டமைப்புகளை உருவாக்கிக் கொள்ளாமல் சிங்டெல், ஸ்டார்ஹப், எம்1 ஆகிய மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றிடமிருந்து கட்டமைப்பு நேரத்தை ஒட்டுமொத்தமாக அது வாங்கும். இத்தகைய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ‘கைபேசி மெய்நிகர் கட்டமைப்பு நடத்துநர்கள்’ என அழைக்கப்படுகின்றன. மை ரிபப்ளிக் நிறுவனம் கடந்த மாதம் இதன் தொடர்பிலான உரிமத்தை பெற்றது.

மை ரிபப்ளிக் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்குத் தாராளமான கைபேசி தரவை வழங்கும் என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மெல்கம் ரோட்ரிகேஸ் தெரிவித்தார். ‘டிபிஜி டெலிகாம்’ நிறுவனம் தொலைத்தொடர்பு உரிமத்தைப் பெற்ற நான்காவது நிறுவனமானதையடுத்து ஒருசில நாட்களிலேயே மற்ற மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்களிலிருந்து ‘கைபேசி மெய்நிகர் கட்டமைப்பு நடத்துநர்கள்’ உரிமத்தைப் பெற மை ரிபப்ளிக் நிறுவனத்திற்கு அழைப்பு வந்ததாக திரு ரோட்ரிகேஸ் கூறினார். மை ரிபப்ளிக் நிறுவனம் எந்த தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் சேர்ந்து செயல்படும் என்பது குறித்த விவரங்களை அவர் வெளியிடவில்லை என்றாலும் மை ரிபப்ளிக் நிறுவனம் அதன் கைபேசி சேவைகளைத் தொடங்கி வைக்கும்போது அது தெரியவரும். மை ரிபப்ளிக் நிறுவனம் எம்1 நிறுவனத்தை வாங்குவது தொடர்பில் வதந்தி நிலவுவது பலருக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்ற திரு ரோட்ரிகேஸ், எம்1 நிறுவனத்தைத் தாங்கள் வாங்க விருப்பம் தெரிவிக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார்.