போலிக் கடன் அட்டை வைத்திருந்த மலேசிய நாட்டவர்களுக்குச் சிறை

போலிக் கடன் அட்டைகளைத் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட அனைத்துலகக் கும்பலைச் சேர்ந்த ஐந்து மலேசியர்களுக்கு 17 மாதங்கள் முதல் 44 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போலியான கடன் அட்டைகளை வைத்திருந்து, அடையாள பத்திரங்களைப் போலியாகத் தயாரித்தது, ஏமாற்றுதல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்காக அவர்களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. போலியான கடன் அட்டைகளைப் பயன்படுத்தி பொருட்களை வாங்கியதற்காக நான்கு மலேசியர்கள் மார்ச் 9ஆம் தேதியும் ஜூலை 19ஆம் தேதியும் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டனர். போலியான கடன் அட்டைகளையும் அடையாள பத்திரம் ஒன்றையும் வைத்திருந்த குற்றத்திற்காக 48 வயதான மற்றொரு மலேசியர் குற்றவாளி என ஜனவரி 9ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டார்.

போலி கடன் அட்டைகைளப் பயன்படுத்தி பொருட்களை வாங்கியதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் போலிசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் தொடர்பில் சான் இயூ சூன், 23, சோங் லீ சியன், 30, வோங் பான் குயென், 47, ஆகிய மூவரும் ஆர்ச்சர்ட் எம்ஆர்டி நிலையத்தில் அதேநாளில் கைது செய்யப்பட்டனர். போலியான அடையாள பத்திரங்கள், போலிக் கடன் அட்டைகள், போலிக் கடன் அட்டைகளைப் பயன்படுத்தி வாங்கப்பட்ட $23,000 மதிப்புள்ள பொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. சியா வெய் யோங், 44, லோ தின் போ, 48, இருவரும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி துவாஸ் சோதனைச் சாவடியில் கைது செய்யப்பட்டனர். நான்கு போலிக் கடன் அட்டைகள், ஒரு போலி அடையாளப் பத்திரம் ஆகியவை லோவிடம் இருந்து கைப்பற்றப்பட்டன. ஐவரும் ஒரே கும்பலைச் சேர்ந்தவர்கள்.