உயில் தொடர்பாக ஏற்பட்ட சச்சரவில் நண்பர் வழக்கு தொடுத்ததைத் தொடர்ந்து வியாபாரி ஒருவரின் ஒரு மில்லியன் மதிப்புள்ள சொத்துகள் மேல் நீதிமன்றத்தால் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன. திரு சியா சின் சன் வழக்கு தொடுத்து எட்டு மாதங்களுக்குப் பிறகு இறந்துவிட்டார். அவரின் மகள் தன் தந்தையின் சொத்துகளைப் பாதுகாக்க எண்ணி அவற்றை முடக்குமாறு நீதிமன்றத்திற்கு விண்ணப்பித்தார். ஆனால் 2016 மார்ச் 24ஆம் தேதியில் இறந்த திரு சியா மொத்தம் நான்கு வெவ்வேறு உயில்களை எழுதியிருந்தார்.
தன் குடும்பத்தினரிடமிருந்து பிரிந்து வாழ்ந்த கால கட்டத்தில்தான் நண்பர் திரு யோங் வாய் போவுடனும் அவருடைய குடும்பத்துடனும் அவர் இருந்ததாக அறியப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில் எழுதிய இரண்டாவது உயிலில் அதிகமாக இலாபம் கிடைக்கக்கூடிய நிலையில் நண்பர் திரு யோங் இருந்தார். ஆனால், இறுதியாக எழுதிய நான்காவது உயிலில் மகள் குமாரி சியாவும் இறந்தவரின் தம்பியும்தான் உயிலை நிறைவேற்றும் உரிமையைப் பெறுபவர்களாக உள்ளனர். இதற்கிடையில் நீதிபதி திரு யோங் மேல் முறையீடு செய்ய அனுமதி அளித்துள்ளார்.