காட்சிக்கு வைக்கப்படும் 100 தேசிய மரபுடைமை பலகைகள்

சிங்கப்பூர் முழுவதும் தேசிய மரபுடைமை சார்ந்த கிட்டத்தட்ட 100 பலகைகள் காட்சிக்கு வைக்கப்படும். பேருந்துகள் 2, 30, 147, 222 ஆகியவற்றின் பயணப் பாதைகளுக்கு அருகே இவை அமைக்கப்படவுள்ளன.தேசிய மரபுடைமை நிலையம் பதினாறாவது முறையாக நடத்தும் சிங்கப்பூர் மரபுடைமை விழாவையொட்டி இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஒவ்வோர் இடத்தின் தனித்தன்மைக்கு அதன் கடந்த காலமும் நிகழ்காலமும் எவ்வாறு பங்காற்றுகிறது என்பதை இந்தப் பலகைகள் காட்டுவதாக தேசிய மரபுடைமைக் கழகம் தெரிவித்தது. இதுபோன்ற ஒரு முயற்சி இதுவரை செய்யப்படவில்லை.

மலாய் மன்னர்கள் தங்கியிருந்த இஸ்தானா கம்போங் கிளாம், மோட்டர் விளையாட்டுகளுக்குப் பிரபலமான இடமாகத் திகழ்ந்த பாசிர் பாஞ்சாங் ரோடு பாசிர் வியூ பார்க், 200 விலங்குகளும் பறவைகளுக்குமான பொங்கோல் ரோட்டில் அமைந்துள்ள காட்சியகம் உள்ளிட்டவை மரபுடைமை தலங்களாக இதில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

பேருந்து நிறுத்தங்களின் பலகைகளைக் கண்காட்சி இடங்களாகக் காட்டும் முதல் தேசிய அளவிலான முயற்சியாக ‘ரைட் என்ட் டிஸ்கவர்’ விளங்குவதாக தேசிய மரபுடைமைக் கழகத்தின் திட்டத்துறை இயக்குநர் ஜெரவிஸ் சூ தெரிவித்துள்ளார்.

“இவ்வாறு செய்வதன் மூலம், பேருந்து நிறுத்தங்களைச் சுற்றியுள்ள இடத்தைப் பற்றிய கதைகளை நாங்கள் சொல்கிறோம். சாதாரண இடங்களில் மரபுடைமை நம்மைச் சுற்றி இருப்பது இதன் மூலம் தெரிய வருகிறது. இந்த முயற்சியால் சிங்கப்பூரர்கள் இதுவரை கவனித்திராத இடங்களை மேலும் சுற்றிப்பார்க்கவும் சிங்கப்பூரின் வரலாற்றை ஆராயவும் தூண்டப்படுவர் என்பது எங்களது விருப்பம்,” என திரு சூ கூறினார்.

சிங்கப்பூரின் இருநூற்றாண்டு அனுசரிப்பில் அங்கம் வகிக்கும் இந்த விழா, மார்ச் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 7ஆம் தேதி வரை நீடிக்கும்.