உடைந்து நொறுங்கிய கண்ணாடிக்கதவு; ‘அமெரிக்கன் கிளப்’ மீது வழக்கு

‘அமெரிக்கன் கிளப்’ பொழுதுபோக்கு கூடத்திலுள்ள குளியல் அறையில் கண்ணாடிக்கதவு உடைந்து நொறுங்கியதால் காயம் அடைந்த இளம்பெண்ணின் குடும்பம், அந்தக் கூடத்திற்கு எதிராக வழக்கு தொடர முடிவு செய்திருக்கிறது. இந்தச் சம்பவம் கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி நடந்தது. அந்தப் பெண் கண்ணாடிக்கதவைச் சாத்தியபோது அது சுக்குநூறாகச் சிதறியதாகக் கூறப்படுகிறது.

கவனக்குறைவு, கவனிக்கும் கடமை மீறல் ஆகியவற்றுக்காக அந்தப் பெண்ணின் குடும்பத்தார் ‘அமெரிக்கன் கிளப்’ கூடத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர். 

‘அமெரிக்கன் கிளப்’, கடந்தாண்டு அந்தப் பெண்ணின் மருத்துவச் செலவுக்காக 20,000 வெள்ளியை வழங்கியது. இருந்தபோதும் சம்பவத்திற்குத் தான் பொறுப்பல்ல என்று அது அப்போது கூறியது.

கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் இயங்கி வரும் ‘அமெரிக்கன் கிளப்’பில் 3,300க்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட புதுப்பிப்புப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. கூடத்தின் நீச்சல் குளத்திற்கு அருகே இருந்த அந்தக் குளியல் அறையும் புதுப்பிக்கப்பட்டிருந்தது.