பங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்

அதிகரித்து வரும் பக்தர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு இன்று நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழாவில் பக்தர்கள் பால்குடங்களையும் காவடிகளையும் ஏந்தி வரும் ஊர்வலப் பாதை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

ஈ‌ஷூன் தொழிற்பேட்டை A வட்டாரத்தைச் சுற்றி வரும் இந்த பாதை ஏறக்குறைய ஒரு கிலோ மீட்டர் தொலைவு இருக்கும் என்று புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிர மணியர் கோயிலின் செயலாளர் திரு அண்ணாதுரை அழகப்பன் தெரிவித்தார்.

“முன்பு இருந்த ஊர்வலப் பாதையின் தொடக்கக் கட்டம் குறுகலாக இருந்தது. அதனால் நெரிசல் உண்டானது. கடந்த சில ஆண்டுகளாக இவ்விழாவில் பங்கேற்ற பக்தர்கள் பாதையை மாற்ற வேண்டும் என்று கோரினர். அதையேற்று, இவ்வாண்டு ஊர்வலப் பாதையை மாற்றி அமைத்து உள்ளோம்,” என்றார் திரு அண்ணாதுரை. 

“இவ்வாண்டு ஏறத்தாழ 1,500 பக்தர்கள் பால்குடம் எடுப்பர் என்றும் குறைந்தது 250 பக்தர்கள் காவடி எடுப்பர் என்றும் எதிர்பார்க்கிறோம். சராசரியாக, ஒவ் வோர் ஆண்டும் 150 பக்தர்கள் காவடி ஏந்தி வருவது வழக்கம். ஆகையால், இவ்வாண்டின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது,” என்றும் அவர் குறிப்பிட்டார். 

இவ்வாண்டு மொத்தம் 6,000 பக்தர்கள் இவ்விழாவில் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பு விருந்தினராக சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் கலந்துகொள்கிறார்.