'வயர்கார்ட்' நிறுவனத்தின் சிங்கப்பூர் அலுவலக ஊழியர்கள் குற்றச்செயலில் ஈடுபட்டிருக்கலாம், ஆனால் அது ஜெர்மன் பணப்பட்டுவாடா நிறுவனத்தின் நிதி நிலைமைக்கு ஒரு பொருட்டல்ல என தனியார் சட்ட நிறுவனம் மேற்கொண்ட விசாரணை முடிவு குறிப்பிடுகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் ஃபைனான்சியல் டைம்ஸ் வெளியிட்ட இது தொடர்பான முதல் விசாரணை அறிக்கையில், நிறுவனத்தின் ஆசியா பசிபிக் அலுவலகத்தில் மோசடி, போலி கணக்கு விபரங்கள் இருக்கலாம் எனக் குறிப்பிட்டதை அடுத்து வயர்கார்ட் நிறுவனப் பங்குகள் அழுத்தத்துக்குட்பட்டன.
தொடக்கத்தில் ஃபைனான்சியல் டைம்சின் அறிக்கை பொய்யானது, துல்லியமற்றது, தவறான எண்ணத்தை உருவாக்கக்கூடியது, புகழைக் கெடுக்கக்கூடியது என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டாலும் அத்தகைய குற்றம் நிகழ்ந்திருக்கலாம் என்பதற்கான ஆதாரத்தை சிங்கப்பூர் சட்ட நிறுவனமான 'ராஜா & டான்' கண்டுபிடித்து இருப்பதாக வயர்கார்டின் இறுதி முடிவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. சிங்கப்பூர் சட்டப்படி, அத்தகைய குற்றங்கள் சிங்கப்பூரில் இழைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அதன் தலைமையகத்தில் அத்தகைய குற்றச்செயல்கள் ஏதும் இடம்பெறவில்லை என்று வயர்கார்ட் நிறுவனம் தனது இறுதி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

