(காணொளி): ஜோகூர் பாரு-உட்லண்ட்ஸ் பெருவிரைவு ரயில் இணைப்பு ஒப்பந்தம் தள்ளிவைப்பு

சிங்கப்பூரையும் மலேசியாவையும் இணைக்கும் பெருவிரைவு ரயில் இணைப்புக்கான (ஆர்டிஎஸ்) ஒப்பந்தம் இவ்வாண்டு செப்டம்பர் 30ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்படும். இந்த ஆறு மாத ஒத்திவைப்புக்காக மலேசியா சிங்கப்பூருக்கு 600,000 வெள்ளி கட்டவேண்டும்.

சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வானும் மலேசியாவின் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக்கும் ரயில் திட்டத்தைத் தற்காலிகமாக ரத்து செய்ய அதிகாரபூர்வமாக இணங்கியுள்ளனர். பிஎஸ்ஏ கட்டடத்திலுள்ள சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சு அலுவலகத்தில் இரு அமைச்சர்களும் இந்த இணக்கத்தை எட்டினர்.

தற்காலிக ரத்துக்குப் பின்னர் ‘ஆர்டிஎஸ்’ திட்டம் மீண்டும் தொடர்வதை சிங்கப்பூர் விரும்புவதாகப் போக்குவரத்து அமைச்சர் கோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கடந்தாண்டு செய்யப்பட்ட இணக்கத்தின்படி இந்தத் திட்டம் தொடரலாம் அல்லது திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என்று திரு கோ கூறினார்.

“இல்லையெனில், ‘ஆர்டிஎஸ்’ திட்டம் மலேசியாவால் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதே முடிவாக இருக்கும். அந்நிலையில் ‘ஆர்டிஎஸ்’ திட்டத்திற்கு வேண்டியவற்றுக்காக நாங்கள் செய்த செலவுகளுக்கு மலேசியா இழப்பீடு தரவேண்டும்,” என்றார் திரு கோ.