சாக்கடைப்புழையில் விழுந்து மரணமடைந்த சம்பவம்: ஆதங்கத்தில் குடும்பத்தினர் 

‘1 ராஃபிள்ஸ் பிளேஸ்’ -இல் உள்ள கட்டுமான சாக்கடைப் புழையில் விழுந்ததன் காரணமாக 26 வயது பகுதி நேர பாதுகாவலர் ஷான் டுங் மரணமடைந்தார். 

சென்ற ஞாயிற்றுகிழமை நடந்த இச்சம்பவத்தில் இறந்த அந்த ஆடவர் 63 மாடி கட்டடத்தின் கூரையில் அமைந்துள்ள ‘ஆல்ஃப்ரேஸ்கோ பார் 1 -ஆல்டிட்டியூட்’ மதுபான கூடத்தில் பணியாற்றிவந்தார். 

கட்டுமானப் பணிகளுக்காக மூடப்பட்டிருந்த பகுதிக்குள் இரு வாடிக்கையாளர்கள் சென்றதை அவர் தடுத்ததாக அவருடன் பணியாற்றியவர்கள் அவரின் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர். 

நள்ளிரவுக்குப் பின் நடந்த அம்பவத்தில் அவர் நான்கு மீட்டர் ஆழத்தில் இருந்த சாக்கடைப்புழையில் விழுந்தார். 

இருள் சூழ்ந்த பகுதியாக அது இருந்ததால் அங்கு சாக்கடைப்புழை இருந்தது அவருக்குத் தெரியாமல் இருந்திருக்கும் என்று குடும்பத்தினர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்துள்ளனர். 

நேற்று மாலை ஷானின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவருக்கு இரண்டு வயதில் மகன் உள்ளான். 

அவரது மரணத்திற்குக் காரணமாக அமைந்த சம்பவங்கள் என்ன என்பது குறித்து குடும்பத்தினர் ஆதங்கத்தில் உள்ளனர். 

மரணமடைந்த ஷான் டுங்கின் தந்தை டுங் கிம் சுவீ, தாயார் சான் லியன் போ, சகோதரி ரெபெக்கா டுங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
மரணமடைந்த ஷான் டுங்கின் தந்தை டுங் கிம் சுவீ, தாயார் சான் லியன் போ, சகோதரி ரெபெக்கா டுங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சதுர வடிவில் உள்ள சாக்கடைப்புழை கிட்டத்தட்ட 1.3 மீட்டர் அகலத்திலும் 1.6 மீட்டர் நீளத்திலும் உள்ளதாக அவரது தந்தை கூறினார். அவர் சம்பவம் நடந்த அன்று அந்த இடத்தைப் பார்வையிட்டார். 

இருட்டாக இருந்த அந்தப் பகுதியில் சாக்கடைப்புழை இருந்ததே தெரியவில்லை என்றும் அந்தப் பகுதியை சுட்டிக் காட்டிய போதுதான் அதை அறிந்ததாகவும் அவர் கூறினார்.   

அவர் பார்வையிட்டபோது அது மூடப்படாமல் இருந்தது என்றும் சம்பவம் நடந்தபோது அது மூடப்படாமல் இருந்ததா என்பது பற்றி தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். 

ஏன் அந்த இடத்தில் அந்த சாக்கடைப்புழை இருக்கிறது என்பதே தெரியவில்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேம்பாட்டுப் பணிகளுக்காக அது அங்கு உள்ளது என்று அதிகாரிகள் கூறிவருகின்றனர். 

இப்பகுதியில் மேலும் செய்திகள்