பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 25 வயது இந்திய நாட்டு ஆடவர் மீண்டும் கைது

மதுபோதையில் இருந்த 25 வயது இந்திய நாட்டு ஆடவர் முருகேசன் ரகுபதிராஜா பொது உடமைகளை சேதப்படுத்துவதாகவும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் கிடைத்த பல புகார்களைக்கொண்டு எவர்டன் பார்க் பகுதிக்கு விரைந்தனர் போலிசார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 4.45 மணிக்கு போலிசாருக்கு இந்தச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்தது.

முதலில் சென்ற இரண்டு போலிஸ் அதிகாரிகள் ஆடவருடன் பேசிக்கொண்டிருப்பதும் பின்னர் இரண்டு போலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்ததும் ஆடவர் அதிகாரி ஒருவரை தாக்க முயன்றதும் பொதுமக்களில் ஒருவர் எடுத்த காணொளியில் தெரியவந்தது. 

ஆடவருக்குப் பின்னால் இருந்த போலிஸ் அதிகாரி ‘டேசர்’ துப்பாக்கியை எடுத்து ஆடவரை சுட்டார். அதனால் எந்த பாதிப்பும் இல்லாத வகையில் நின்ற ஆடவரை மற்றொரு அதிகாரி தடியைக் கொண்டு இருமுறை தாக்கினார். மீண்டும் ‘டேசர்’ துப்பாக்கியால் சுடப்பட்டபின்னர் தரையில் விழுந்த ஆடவரை விலங்கிட்டனர் போலிசார். 

பொது உடமைகளை சேதப்படுத்தியதற்காகவும் மதுபோதையில் இடையூறு விளைவித்ததற்காகவும் அரசாங்க ஊழியரை அடிதடி செய்து தாக்கியதன் மூலம் பணியை செய்யவிடாமல் தடுத்ததற்காகவும் ஆடவரை கைது செய்துள்ளதாக போலிசார் ‘நியூபேப்பர்’ செய்தித்தாளிடம் கூறியுள்ளனர். 

காயப்படுத்தி கொள்ளையடித்ததால் அவர் மீது வழக்கு விசாரணை நடந்துவருவதாகவும் சம்பவம் நடந்த நேரத்தில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. 

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது பிணை மீட்டுக்கொள்ளப்பட்டது. 

மொத்தம் 10 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது. 

அடுத்த மாதம் 9ஆம் தேதி நீதிமன்றத்தில் அவர் நிறுத்தப்படுவார்.