சவால்மிக்க பணியைத் திறம்பட கையாண்ட தீயணைப்பு வீரர்கள்

கடந்த வெள்ளியன்று மாலை 5.10 மணிக்கு ஜூரோங் தீயணைப்பு நிலையத்திற்கு ஓர் அழைப்பு வந்தது. மத்திய செயல்பாட்டுத் தளத்திலிருந்து எண் 43, ஜாலான் புரோவில் தீச்சம்பவம் என்ற செய்தி அவர்களுக்குக் கிடைத்தது.

நூற்றுக்கணக்கான ‘எல்பிஜி’ எரிவாயுத் தோம்புகள் வெடித்துக்கொண்டிருக்கும் பயங்கரத்தைப் பார்க்கப்போகிறார்கள் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. 

ஜூரோங் தீயணைப்பு நிலையத்தின் முதல் குழு சம்பவ இடத்திற்குச் சென்ற பத்தாவது நிமிடத்தில் நிலையத்தின் தளபதி 36 வயது கேப்டன் தினேஷ் வெள்ளைச்சாமி அந்த இடத்தில் இருந்தார். 

“கரும்புகை சூழ்ந்திருந்தது. எரிவாயுத் தோம்புகளிலிருந்து ‘ஹிஸ்’ எனும் சத்தம் வெளியானது நன்கு கேட்டது. அப்படி என்றால் வெப்பத்தின் தாக்கத்தில் தோம்பு வெடிக்கும் என்று எதிர்பார்க்கலாம். சிறிது நேரத்தில் தோம்புகள் வெடித்ததையும் பறந்ததையும் கண்டேன். எங்கும் வெடிப்பு சத்தம் கேட்டது,” என்றார் கேப்டன் தினேஷ். 

சம்பவ இடத்தில் நூற்றுக்கணக்கான ‘எல்பிஜி’ எரிவாயுத் தோம்புகள் வெடித்தன.
சம்பவ இடத்தில் நூற்றுக்கணக்கான ‘எல்பிஜி’ எரிவாயுத் தோம்புகள் வெடித்தன.

“திரைப்படத்தில் காண்பதைப் போன்றே இருந்தது,” என்ற அவர், தமது ஆறு ஆண்டுகாலப் பணியில் தாம் கண்ட மாபெரும் தீச்சம்பவம் இதுதான் எனக் குறிப்பிட்டார்.

இரண்டு காற்பந்து விளையாட்டுத் திடல் அளவுள்ள வளாகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தோம்புகளில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் சுமார் 120 வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் 35 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. 

“கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் பிரிவுத் தளபதி பொறுப்பேற்கும் வரையில் தீயணைப்பு முயற்சியின் ஒருங்கிணைப்புத் தலைவராக நான் பணியாற்றினேன். இத்தனை பேரின் பாதுகாப்புக்கும் நான் பொறுப்பு என்று நினைக்கையில் என் மனம் படபடத்தது,” என்றார் கேப்டன் தினேஷ். 

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் 35 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் 35 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

“தினந்தோறும் நாங்கள் செய்யும் பயிற்சி இந்தச் சம்பவத்தைக் கையாள நன்கு உதவியது. மேலும் இந்த அனுபவத்தைக் கொண்டு மற்ற அதிகாரிகளுக்கு பெரிய தீச்சம்பவங்களைக் கையாள்வது குறித்த அனுபவத்தைப் பகிர்ந்து பயன்பெறலாம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

தீயை அணைக்க ஏறக்குறைய ஆறு மணி நேரம் ஆனது. ‘எல்பிஜி’ எரிவாயு தொடர்பான ஆகப் பெரிய தீயணைப்பு முயற்சி இது என சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது. 

கடந்த வெள்ளிக்கிழமை ஜூரோங் தொழிற்பேட்டையின் ஜாலான் புரோவில் ஏற்பட்ட பயங்கர தீச்சம்பவத்தைக் கையாண்ட அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டனர் அப்பணியில் ஈடுபட்ட தீயணைப்பாளர்களில் சிலர்.

“ஏறத்தாழ முப்பது மீட்டர் உயரத்தில் தீ எரிந்தது. இதுவரை இதுபோன்ற உயரமான, பெரிய அளவிலான தீயை நான் கண்டதில்லை. என்னோடு பணிபுரியும் சக அதிகாரிகளும் இதுபோன்ற சம்பவத்தைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை,” என்று கூறினார் முதலில் சம்பவ இடத்திற்குச் சென்ற குழுவின் தளபதி 26 வயது லெஃப்டினன்ட் டான் சுன் ஹுயி. 

“சம்பவ இடத்திற்குச் சென்றதும் நான் பயந்தேன். ஆனால் அச்சத்தை ஒதுக்கிவைத்துப் பணியை மேற்கொள்ளவேண்டும். அவ்வாறே அனைவரும் செய்தோம்,” என்றார் 29 வயது வாரன்ட் அதிகாரி சையத் யாசிட்.

தேசிய சேவை புரிந்துவரும் 20 வயது தீயணைப்பாளர் லான்ஸ் கார்ப்பரல் ஃபஸ்லான் ரொசாலி ஜூரோங் தீவு தீயணைப்பு நிலையத்தில் பணியில் சேர்ந்து இரண்டே மாதங்கள் தான் ஆகிறது. அவர் பணியில் இருக்கும்போது எப்படியும் ஒரு பெரிய சம்பவத்தில் ஈடுபடுவார் என்று எதிர்பார்த்தார். ஆனால் அது இவ்வளவு சீக்கிரம் வரும் என்று தெரியவில்லை என்றார்.      

படையின் நான்காம் பிரிவைச் சேர்ந்த ஐந்து தீயணைப்பு நிலையத் தளபதிகளும் சம்பவ இடத்தில் இருந்து தீயணைக்கவும் சிக்கியிருந்தோரை மீட்கவும் முயற்சிகள் எடுத்துள்ளனர். 

தீயை அணைக்க ஏறக்குறைய ஆறு மணி நேரம் ஆனது. ‘எல்பிஜி’ எரிவாயு தொடர்பான ஆகப் பெரிய தீயணைப்பு முயற்சி இது என சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.
தீயை அணைக்க ஏறக்குறைய ஆறு மணி நேரம் ஆனது. ‘எல்பிஜி’ எரிவாயு தொடர்பான ஆகப் பெரிய தீயணைப்பு முயற்சி இது என சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்தில் முக்கிய பிரிவின் ஒருங்கிணைப்புத் தலைவராகச் செயல்பட்டார் மேஜர் நவின் பாலகிருஸ்ணன். இவர் புக்கிட் பாத்தோக் தீயணைப்பு நிலையத்தின் தளபதி. 

தீயின் வீரியத்தையும் உண்மை நிலவரத்தையும் கண்டறிய கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த வளாகத்தினுள் தனியே நடந்து சென்றார் மேஜர் நவின்.

“தீ கொழுந்துவிட்டு எரிந்த இடத்திற்கு நான் முதலில் சென்று சம்பவத்தின் நிலைமையை ஆராய்ந்தேன். நிலைமை பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டே தீயணைப்பு வீரர்களை உள்ளே அனுப்பினேன்,” என்றார் மேஜர் நவின். 

தீயணைப்பாளர்களுக்குத் தேவையான குடிநீர், அவர்களின் நலன் முதலிய அம்சங்களையும் தளபதி என்ற முறையில் தாம் கவனித்துகொண்டதாக அவர் குறிப்பிட்டார். 

உடலையும் மனதையும் சோர்வுறச் செய்த மாபெரும் தீயணைப்பு முயற்சியில் ஈடுபட்டு, கடமையைச் சரிவர செய்து முடித்து, பாதுகாப்பாக அனைவரும் வெளியேறியது அனைவருக்கும் மனமகிழ்ச்சியைத் தந்தது என்றார் அவர். 

“சகோதரத்துவத்தை நாங்கள் அனைவரும் நேரில் கண்டோம். ஒற்றுமையுடன் பணியாற்றி ஒருவருக்கொருவர் தட்டிக்கொடுத்துக்கொண்டோம்,” என்று அவர் நெகிழ்ச்சியுடன் சொன்னார். 

இந்த தீச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்; இருவர் காயமுற்றனர். இன்னும் அவ்விடம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நான்கு மணி நேர இடைவெளியில் தீயணைப்பு வீரர்கள் பணி மாற்றம் செய்து அந்த வளாகத்தில் மீண்டும் அசம்பாவிதம் நிகழாதபடி உறுதிசெய்கின்றனர். 

வளாகத்தை மூடும்படி கட்டட, கட்டுமான ஆணையம் ஆணை பிறப்பித்துள்ளது.