தாய்மொழி என்பது தேர்வுக்கு மட்டுமல்ல; வாழ்க்கைக்கும்

மாணவர்களின் புத்தாக்க எழுத்துத் திறனை மேம்படச் செய்ய வேண்டும். எதிர்கால எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் சிங்கையில் உருவாக வேண்டும்.

இந்நோக்கத்துடன் கல்வி அமைச்சின் தாய்மொழி துறையின் தமிழ்மொழிப் பிரிவு, சிறுகதை, கவிதை, நாடக உரையாடல் எழுதுதல் ஆகியவற்றுக்கான மாணவர் படைப்பாற்றல், கற்றல்திறன் திட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.

இவ்வாண்டின் தொடக்கத்தி லிருந்து இதில் உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்கள் உள்ளூர் கலைஞர்களிடமிருந்து பயிலரங்குகள் வழி எழுத்து உத்திகளைக் கற்றுக்கொண்டு தங்களது சொந்தப் படைப்புகளை எழுதவும் முனைந்தனர்.

அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த மாணவர் படைப்புகளை அங்கீகரிக்கும் விதமாக, ‘நானும் ஒரு படைப்பாளி வெற்றிவிழா’ நிகழ்ச்சி நேற்று உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்தது.

இதில் 102 மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.  மொத்தம் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் இவ்வாண்டின் திட்டத்தில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பாடக்கலைத்திட்ட வரைவு, மேம்பாட்டுப் பிரிவு-1ன் இயக்குநர் திரு சின் கிம் ஹோ கலந்துகொண்டார்.

கடந்த 30 ஆண்டுகளாக மாணவர்களுக்கான எழுத்துத் திறன் போட்டியாக நடைபெற்று வந்த இத்திட்டம்  ஈராண்டுகளுக்கு முன்  படைப்பாற்றலில் கவனம் செலுத்தத் தொடங்கியது என்று அவர் தமது உரையில்  தெரிவித்தார்.   

நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக கடந்தாண்டில் இத்திட்டத்தில் பங்கு பெற்ற சிறந்த மாணவர்களின் படைப்புகள் ஒரு மின்னூலாக நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

‘‘மொழியைக் கற்றுக்கொள்வது தேர்வுக்காக மட்டும் அல்ல. தமிழ்மொழியை அவர்கள் வாழ்க்கையோடு இணைத்துக்கொள்ள வேண்டும். அது எப்படி தங்களது அடையாளத்தைக் கொடுக்கிறது என்பதை மாணவர்களே உணர வேண்டும். 

‘‘இது சாத்தியமாக, பெற்றோர்கள் மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்,’’ என்று தமது உரையில் குறிப்பிட்டார் பாடக்கலைத்திட்ட வரைவு, மேம்பாட்டுப் பிரிவு-1, தாய்மொழி துறையின் துணை இயக்குநர் திருவாட்டி சாந்தி செல்லப்பன். கவிதை பிரிவில் பங்குபெற்ற டன்மன் மேனிலைப் பள்ளியில் பயிலும் 17 வயது குணசீலன் பிளஸ்சி ஷேரன், நடத்தப்பட்ட பயிலரங்குகள் வழி கவிதையின் ஆழத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது என்றும் அதனை எளிய நடையில் எழுதலாம் என்பது தமது ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது என்று விளக்கினார்.

உள்ளூர் எழுத்து திற னாளர்களைக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளித்தது பயனுள்ளதாக விளங்கியது ஏனெனில் கற்றுக்கொண்ட உத்திகளை மாணவர்கள் வகுப்பறை செயல்பாடுகளில் வெளிக்காட்டியதாக ஈசூன் இன்னோவா தொடக்கக் கல்லூரியைச் சேர்ந்த ஆசிரியர் திருவாட்டி செல்வி மாணிக்கம் சொன்னார்.

மாறுநேர வேலை காரணமாக வீட்டில் அனைவரும் அதிகம் தமிழ் பேசும் வாய்ப்புகள் இல்லாத பட்சத்தில் சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் தமது பேத்தி தரனியாவுக்கு இந்த கற்றல் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைந்தார் 64 வயது பாட்டி க.மல்லிகா.

 

 

2019-07-14 06:10:00 +0800

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஓவியரின் கைவண்ணத்தில் 'அமராவதி நகர்' திட்டத்துக்காக வரையப்பட்ட மாதிரிப் படம். படம்: ஊடகம்

13 Nov 2019

'அமராவதி நகர்' திட்டம் கைவிடப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு

ஜூரோங்கில் உள்ள ஜாலான் டெருசனில் வீசப்பட்ட பொருட்கள். படம்: தேசிய சுற்றுப்புற வாரியம்

13 Nov 2019

பொது இடத்தில் சாமான்களை வீசியவருக்கு $9,000 அபராதம்