‘பல கலாசாரங்கள் கொண்ட சூழலை உருவாக்குக’

சிங்கப்பூரர்கள் அவரவரது சொந்த கலாசாரத்தைப் பற்றி மட்டுமே தெரிந்துகொள்வதோடு நின்றுவிடக்கூடாது. மற்ற சமய, கலாசாரங்களைச் சேர்ந்தவர்கள்  பற்றியும் அறிந்துகொண்டால் மற்றவர்களின் உணர்வுகளையும் வாழ்க்கைமுறையையும் நன்கு புரிந்துகொள்ளலாம்.

அத்துடன் அனைவருடனும்  கலந்துற வாடக்கூடிய சூழலையும் விரிவுப்படுத்தலாம் என்று ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில் நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர், இணைப்பேராசிரியர் முகம்மது ஃபைசால் இப்ராஹிம் கூறினார். இன நல்லிணக்க நாளை முன்னிட்டு முதன்முறையாக இந்து சமய வழிபாடுகளைப் பற்றியும் இந்திய பாரம்பரியத்தைப் பின்பற்றுவது பற்றியும் மக்களுக்கு உணர்த்தும் நிகழ்ச்சி நேற்று ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில் இடம்பெற்றது.

இந்தியர்களுடன் சீனர், மலாய்க்காரர் என்று பல்வேறு இனங்களைச் சார்ந்த கிட்டத்தட்ட 400 பேர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கல்வி, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் டாக்டர் ஃபைசால் வருகையளித்திருந்தார்.

ஒரு நாடளாவிய முயற்சிக்குக் கைகொடுக்கும் வகையில் பல இன, சமய மக்களுக்கு இந்து சமய முறைகளையும் முக்கிய பாரம்பரிய  நடவடிக்கைகளையும் விளக்க ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம், தேசிய மரபுடைமைக் கழகம், சிண்டா,  நீ சூன் மற்றும் செம்பவாங் குழுத்தொகுதிகளின் பல இன, சமய நன்னம்பிக்கை வட்டம் ஆகிவற்றுடன் சேர்ந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.

கோலம் அச்சிடுதல், பாரம்பரிய விளையாட்டுகள், தகவல் காட்சிக் கூடம், பொருட்கள் கண்காட்சி, பூமாலை தொடுக்கும் நடவடிக்கை எனப் பல வழிகளில் இந்து சமய, கலாசாரத்தை மக்களிடம் இந்நிகழ்ச்சி சென்று சேர்த்தது.

ஸ்ரீ நாராயண மிஷன், சுவாமி எனப்படும் சமுதாய நல அமைப்பு ஆகியவற்றின் இல்லவாசிகளும் இந்நிகழ்ச்சியில்  கலந்துகொண்டு பல்வேறு நடவடிக்கைகளில் பங்கெடுத்தனர். அவர்களுள் ஒருவரான திருவாட்டி பூங்காவனம் ஆலயத்தில் வழிபட்டதுடன் பல இனத்தவருடன் தாம் உரையாடி மகிழ்ந்ததாகவும் கூறினார்.

வெவ்வேறு சமயத் தலங்களில் சந்தித்த மக்களை இந்த இந்து கோவிலிலும் சந்தித்தது இந்நிகழ்ச்சியில் அவருக்குப் பிடித்த அம்சங்களில் ஒன்று என்று அவர் பகிர்ந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியை ஒரு தொடக்க முயற்சியாகக் கொண்டு மேலும் பல இன, சமய சமூக மேம்பாட்டுக்கான திட்டங்களை சிண்டா, நற்பணி பேரவை போன்ற அமைப்புகளுடன் இணைந்து ஈடுபட விரும்புவதாக ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம்  தெரிவித்தது. அவ்வகையில் சிங்கப்பூர் ஓர் ஒன்றுபட்ட சமுதாயமாகத் திகழ்வதற்கான திட்டங்களைப் பற்றி இந்த அமைப்புகளைச் சேர்ந்த பலர் ஒரு பதாகைவழி பகிர்ந்துகொண்டனர்.

அதில் தமது கருத்தையும் தெரிவித்த திரு ஃபைசால், மற்றவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றுவதன் மூலம் நமது வாழ்க்கையில் இன்பம் காணலாம் என்று தெரிவித்தார். இதுபோன்ற நிகழ்ச்சி இந்து சமயம், அதன் சமூக வரலாறு, பாரம்பரியம் ஆகியவற்றைப் பற்றி வேற்று இனத்தார் புரிந்துகொள்வதற்கு ஒரு சிறந்த தளமாக அமைந்துள்ளது என்கிறார் இஸ்லாமிய மதத்தவரான குமாரி ஃபாரா.

“இந்து கோவிலுக்கு நான் வருவது இதுவே முதல் முறை. இந்து கோவிலின் அமைப்பு, விளக்கு ஏற்றுவதற்கான காரணம் எனப் பல அம்சங்களின் அர்த்தத்தை, இங்கு ஏற்பாடு செய்யப்பட்ட நடவடிக்கைகள் மூலம் நான் அறிந்துகொண்டேன். பல்லின மக்களுக்காக சுவாரசியமாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் எனக்கு மல்லிகை பூக்களை மாலையாக கோர்க்கும் நடவடிக்கை பிடித்திருந்தது. இதுபோன்ற சிறு சிறு நடவடிக்கைகளின் மூலம் நாம் இன, மத வேற்றுமையின்றி ஒரு நாட்டு மக்களாக திகழலாம் என்பதை உணர்ந்துகொள்கிறேன்,” என்றார் 24 வயது ஃபாரா.

மக்கள் நல்ல புரிந்துணர்வை வளர்த்துக்கொள்ள  வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து அதைச் சிறு வயதிலிருந்தே தங்கள் பிள்ளைகளிடத்திலும் வித்திட வேண்டும் என்று நம்புகின்றனர்  திரு, திருமதி ஓங் தம்பதியர். தங்களின் இரு பேரக்குழந்தைகளை ஆலயத்துக்கு அழைத்து வந்த ஓங் தம்பதியினர்,   இந்திய கலாசாரத்தை ஆழமாக அறிந்துகொள்வதற்கு இந்நிகழ்ச்சி வாய்ப்பளித்ததாகக் கூறினர்.

மக்களின் பேராதரவைப் பெற்ற இந்நிகழ்ச்சியை வரும் ஆண்டுகளில் மேம்படுத்தி வழங்க விரும்புவதாகக் கூறினார் ஸ்ரீ மஹா மரியம்மன் ஆலயத்தின் தலைவர் திரு மகேந்திரன். அத்துடன் பல அமைப்புகளுடன் சேர்ந்து சிங்கப்பூரர்களின் நல்வாழ்வுக்கு உதவிக்கரம் அளிப்பதற்குத் திட்டங்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நார்த்பாயிண்ட் சிட்டியில் நேற்று நடந்த ‘எஸ்ஜி செக்யூர்’ சாலைக் காட்சியில் துப்பாக்கிக் காரன் தாக்குதல் நடத்தினால் அதை எப்படிச் சமாளிப்பது என்பதை
விளக்க பாவனைக் காட்சி இடம்பெற்றது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

25 Aug 2019

பயங்கரவாதத்தை விளக்கும் பயிற்சியில் பாவனைக் காட்சி