மோசமான அனுபவங்களால், குடிபோதையிலுள்ள பயணிகளைத் தவிர்க்கும் டாக்சி ஓட்டுநர்கள்

டாக்சி ஓட்டுநரான 54 வயது அலன், சில ஆண்டுகளுக்குமுன் கிளார்க் கீயில் சென்று கொண்டிருந்தபோது, 20 வயது மதிக்கத்தக்க ஓர் இளைஞர் அவரது டாக்சியை நிறுத்தி ஏறிக்கொண்டார். மதுவாடை வீசிய இளைஞரின் பேச்சு குளறியது, கண்கள் சிவப்பேறியிருந்தன. இளைஞர் சொன்ன இடத்தை டாக்சி அடைந்தபோது, குடிபோதையிலிருந்த இளைஞன் $30 டாக்சி கட்டணத்தைச் செலுத்தாமல் கதவைத் திறந்துகொண்டு வெளியேறினான்.

“நான் அவனைத் தடுக்க முயன்றேன். ஆனால் அவன் என்னை குத்தி, உதைக்கத் தொடங்கினான். நான் நிலைதடுமாறி கீழே விழுந்தவுடன், அவன் ஓடிவிட்டான்,” என ஓட்டுநர் அலன் தெரிவித்தார்.

முகத்திலும் நெஞ்சிலும் ஏற்பட்ட காயங்களுக்காக அவருக்கு மூன்று நாள் மருத்துவ விடுப்பு தரப்பட்டது. “நான் சில நாட்களுக்கு டாக்சி ஓட்டவில்லை. அதனால் எனக்கு வருமானமும் இல்லை,” என்றார் அவர்.

இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழாவிட்டாலும், குடிபோதையில் இருப்பவர்களை டாக்சியில் ஏற்றிக்கொள்வதில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பேட்டி கண்ட 20 டாக்சி ஓட்டுநர்களில் பெரும்பாலோர் கூறினார்கள். இதுபோன்ற மோசமான சம்பவத்தை எதிர்நோக்கியதாகக் கிட்டத்தட்ட நால்வரில் மூவர் சொன்னார்கள். சிலர் தாக்கப்பட்டனர் அல்லது கெட்ட வார்த்தைகளால் திட்டப்பட்டனர். மற்ற சிலரின் டாக்சிகள் அசுத்தமாக்கப்பட்டன அல்லது பயணிகள் கட்டணத்தைத் தராமல் ஓடிவிட்டனர்.

இதையும் பார்க்கவும்: (காணொளி): பெண் பயணியை அவமானப்படுத்திய டாக்சி ஓட்டுநர் பணிநீக்கம்

அண்மையில், குடிபோதையில் இருந்த ஒரு பெண் பயணி கட்டணத்தைக் கொடுக்காதபோது, அவரை அவமானப்படுத்துவதற்காக டாக்சி ஓட்டுநர் காணொளி எடுத்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டார். அந்தப் பெண் கட்டணம் செலுத்த தனது பையைத் தேடுவது போலவும், அது கிடைக்காதது போலவும் காணொளியில் தெரிகிறது. “உன்னால் என் நேரம் வீணாகிறது. உன்னால் எல்லாருடைய நேரமும் வீணாகிறது,” என்று ஓட்டுநர் சொல்வதும் காணொளியில் கேட்கிறது.

இந்தச் சம்பவத்தை ஓட்டுநர் கையாண்ட முறை ஏற்புடையதல்ல என்று கூறிய கம்ஃபர்ட் டெல்குரோ நிறுவனம், அவரது ஒப்பந்தத்தை ரத்து செய்தது.

இந்த ஓட்டுநர் நிலைமையைச் சரியாகக் கையாளவில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பேட்டிகண்ட டாக்சி ஓட்டுநர்கள் கூறியபோதிலும், குடிபோதையிலுள்ள பயணிகளை ஏற்றுக்கொள்ளும் ஓட்டுநர்கள் ஆபத்துக்கு இலக்காகக்கூடிய சூழ்நிலையை எதிர்நோக்குவதாக அவர்கள் வலியுறுத்தினார்கள். இதனால், சிலர் குடிபோதையில் இருக்கும் பயணிகளை முற்றிலும் தவிர்ப்பதாகத் திரு டான் என்ற டாக்சி ஓட்டுநர் கூறினார்.

ஆனால், சில சமயங்களில் டாக்சி ஓட்டுநர்கள் வேறு வழியின்றி குடிபோதையில் இருப்பவர்களையும் ஏற்றிக்கொள்கிறார்கள்.

“அதிகாலையில் அல்லது பின்னிரவில் டாக்சி ஓட்டும்போது குடிபோதையில் இருப்பவர்களைப் பார்ப்பது சகஜம். இந்த நேரங்களில், மதுபானக் கூடங்கள் இருக்கும் வட்டாரங்களுக்குச் செல்லாவிட்டால் வருமானம் கிடைக்காது,” என்றார் 70 வயது டாக்சி ஓட்டுநரான திரு லீ.

இவர் ஒவ்வொரு மாதமும் சராசரியாக ஒன்று அல்லது இரண்டு முறை குடிபோதையிலுள்ள பயணிகளால் பிரச்சனைகளைச் சந்திக்கிறார்.

“ஒரு பயணி குடிபோதையில் இருப்பதைப் பார்த்தவுடன் சொல்லிவிடமுடியும். அவர்கள் டாக்சியில் ஏறியவுடன், பிளாஸ்டிக் பை வேண்டுமா என்று கேட்பேன்,” என்றார் அவர்.

சில ஓட்டுநர்கள் குடிபோதையில் இருக்கும் பயணிகளிடம் பேச்சு கொடுப்பதைத் தவிர்க்கிறார்கள். மற்ற சிலர் முன்னெச்சரிக்கையாக கேமராக்களில் பதிவு செய்கிறார்கள்.

பிரச்சனை தரும் பயணிகளைச் சொந்தமாகக் கையாளாமல் நிறுவனத்திடமும் போலிசாரிடமும் புகார் செய்யும்படி டாக்சி நிறுவனங்கள் ஆலோசனை கூறுகின்றன.

ஆனால், குடிபோதையிலுள்ள ஓட்டுநருக்குப் பெரும்பாலும் பொறுமை குறைவாகவே இருக்கும் என்பதால், “எங்களை நாங்கள்தான் பார்த்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் என்ன நடக்கும் என்று நமக்குத் தெரியாது,” என்கிறார் ஆறு ஆண்டுகளாக டாக்சி ஓட்டிவரும் ஒருவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!