மலேசிய கடற்பகுதியில் காணாமல்போன இரு சிங்கப்பூரர்களைத் தேடும் பணி நேற்றும் நான்காவது நாளாக தொடர்ந்து நடைபெற்றது.
ஆனால் இம்முறை இரு மடங்கு அளவுக்கு தேடும் கடற்பகுதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேடி மீட்புப் பணி பற்றி விவரம் அளித்த மலேசிய கடற்துறை அமலாக்கப் பிரிவு, ஸ்ரீ புவாட் தீவு, பாகாங்கில் உள்ள தியோமான் தீவுக்கு இடையே 900 சதுர கடல் மைல் அளவுக்கு தேடும் கடற்பகுதி விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.
நேற்று மட்டும் அதே கடற்பகுதியில் 500 சதுர கடல் மைல் தொலைவுக்கு ேதடும் பணி நடைபெற்றது. நான்கு ஹெலிகாப்டர்கள், ஒரு விமானம், மலேசிய கடற்படைக்குச் சொந்தமான ஒரு கப்பல் உட்பட இரண்டு கப்பல்கள், ஐந்து படகுகள் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. காலை 7.30 மணிக்குத் தொடங்கி மாலை 7.00 மணி வரை இருவரையும் ேதடும் பணி தீவிரமாக நடைெபற்றது.
இதற்கிடையே மெர்சிங்கில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கடற்பகுதியில் உள்ள மீனவர்களுக்கும் கப்பல்களுக்கும் காணாமல் போனவர்களைப் பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அமலாக்கப் பிரிவினர் தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை கயாக் படகை ஓட்டிச் சென்ற சிங்கப்பூரர்களான 57 வயது திருமதி புவா கியோக் டின், 62 வயது டான் எங் சூன் ஆகிய இருவரும் காணாமல் போயினர்.
கடைசியாக பச்சை நிற படகில் இருவரும் காணப்பட்டனர். ஜோகூரின் மெர்சிங் கடற்பகுதியில் 'கயாக்' படகுக் குழுவோடு இருந்த அவர்கள் இருவரும் பின்னர் தனியாக பிரிந்து சென்றனர்.
அதன் பிறகு இருவரின் நிலை என்ன ஆனது என்பது தெரியவில்லை.
தேசிய நாளான வெள்ளிக் கிழமை அன்று காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதே நாள் பிற்பகல் 3.00 மணியளவில் தேடி மீட்கும் குழு அனுப்பி வைக்கப்பட்டது.
கயாக் குழுவில் இடம்பெற்ற 15 பேரில் நால்வர் மட்டும் மெர்சிங்கிலேயே தங்கி இரு சிங்கப்பூரர்களைப் பற்றி தகவல் அறிய காத்திருக்கின்றனர்.
குழுவில் இருந்த மற்றவர்கள் சிங்கப்பூர் திரும்பிவிட்டனர்.

