பேட்மேன் சூப்பர்மேனைத் தாக்கிய சக ஊழியருக்குச் சிறை

தன் சகா ஒருவரைக் கத்தியைக் கொண்டு தாக்கியதற்காகவும் தலைக்கவசத்தால் அடித்ததற்காகவும் ஃபுட்பாண்டா நிறுவனத்தின் விநியோக ஊழியர் ஒருவருக்கு இரண்டரை ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆறு பிரம்படிகள் கொடுக்கும்படியும் உத்தரவிடப்பட்டது.

எங் குவான் ஹோங், 40, என்ற அந்த ஊழியர், பேட்மேன் சூப்பர்மேன், 29, என்பவரை இந்த ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி யுனைட்டெட் ஹவுஸ் கட்டடத்திற்கு வெளியே தாக்கியதாக விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது. இந்த இரண்டு ஊழியர்களும்   வாட்ஸ்அப் குழுமத்தில் இடம்பெற்றிருந்தனர்.

எங் குவான் அனுப்பிய ஒரு வாட்ஸ்அப் செய்தி காரணமாக இருவருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 

எங் குவான் வாட்ஸ்அப் குழுவில் குரல் செய்தி ஒன்றை அனுப்பினார். 

ஃபுட்பாண்டா நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி இருப்பதாகவும் அதில் சேராதவர்கள் முட்டாள் என்று பொருள்படும் மலாய் மொழி வார்த்தையை அந்தச் செய்தியில் அவர் கூறியிருந்தார்.

அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டாம் என்று பேட்மேன் கேட்டுக்கொண்டார். இருவரும் பரஸ்பரம் வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பிக்கொண்டனர். 

பிரச்சினையை நேரே தீர்த்துக்கொள்ளலாம் என்று எங் குவான் திரும்பத் திரும்ப பேட்மேனுக்கு சவால் விடுத்தார்.  

கடைசியில் இருவரும் ஃபுட்பாண்டா நிறுவனம் அமைந்துள்ள யுனைட்டெட் ஹவுசில் சந்தித்தனர். தான் வந்துவிட்டதாக என் குவானுக்கு பேட்மேன் செய்தி அனுப்பினார். அலுவலகத்தில் இருந்த எங் குவான் பேனா கத்தி ஒன்றை எடுத்துக்கொண்டு தன்னுடைய மின்-ஸ்கூட்டர் கெட்டுவிட்டதாக நிர்வாகிகளிடம் பொய் சொல்லிவிட்டு பேட்மேனை சந்திக்க வெளியே வந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. 

பேட்மேன் 10 ஆண்டுக்கு முன்பு இந்தப் பெயர் காரணமாக இணையத்தில் பிரபலமானவர். திருட்டு, கன்னக்களவு, போதைப் புழக்கம் காரணமாக இவருக்கு 2013ல் 33 மாதம் சிறைத்தண்டனை கிடைத்தது. இதையடுத்து உலகளவில் இவர் பிரபலமாகி இருந்தார்.