சொகுசு கப்பல் பயணத்திற்குச் சென்ற முதியவர் காணவில்லை

ஓய்வுபெற்ற மின்சாரப் பணியாளர் கோ ஹை பேங் முதன்முறையாக சொகுசு கப்பலில் பயணம் செய்திருந்தார். அப்போது அவருடன் யாரும் துணை போகவில்லை. இப்போது 74 வயது திரு கோ எங்கு இருக்கிறார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.  ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி அவர், ‘கெந்திங் டிரீம்’ கப்பலில் ஏறினார். அந்தக் கப்பல் அடுத்த இரண்டு நாட்களில் மலேசியாவின் பினாங்கு மற்றும் லங்காவி தீவுகளுக்குச் சென்றது. 

கப்பல் சிங்கப்பூருக்குத் திரும்பிய பின்னர் பயணிகள் வெளியேறிக் கொண்டிருந்தபோதுதான் திரு கோவைக் காணவில்லை என்பது பணியாளர்களுக்குப் புலப்பட்டது.திரு கோ காணாமல் போனதை ‘கெந்திங் டிரீம்’ கப்பலின் உரிமையாளரான டிரீம் க்ரூஸஸ் உறுதி செய்துள்ளது. கப்பலில் திரு கோ தங்கியிருந்த அறையில் அவரது உடைமைகள் அப்படியே இருந்ததாக ‘டிரீம் க்ரூஸஸ்’ பணியாளர்கள் கண்டனர். அவர்கள் அந்தப் பொருட்களைத் தம்மிடம் ஒப்படைத்துள்ளதாகத் திரு கோவின் மகன் திரு ஏட்ரியன் கோ தெரிவித்தார்.

ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி திரு கோ கப்பலின் தங்கும் அறைக்குள்  செல்வதை அங்குள்ள கண்காணிப்புக் கேமராக்களின் காணொளிப்பதிவு காட்டுவதாக அவரது மகன், வான்பாவ் நாளிதழிடம் தெரிவித்தார். பயணம் முழுவதும் அவர் அந்த அறையிலிருந்து வெளிவந்ததாகக் காணொளிப்பதிவுகளில் எந்த அறிகுறிகளும் இல்லை.

ஆனால், கப்பலிலிருந்து ஓர் உருவம் கடலுக்குள் விழுவது வேறு சில கேமராக்களில் பதிவானதாகத் திரு ஏட்ரியன் கூறினார்.

தனது தந்தை குள்ளமாக இருப்பதால் கப்பலின் அறைக்குள் இணைக்கப்பட்டுள்ள வெளிப்புற மாடத்திலிருந்து தவறுதலாக விழும் சாத்தியம் குறைவு என்று திரு ஏட்ரியன் தெரிவித்தார். மேலும் திரு கோவுக்கு உடல்நலப் பிரச்சினையோ பணப்பிரச்சினையோ இல்லை என்றார் அவரது மகன். அந்த முதியவர் மூடத்தனமாக எதையும் செய்திருக்கமாட்டார் என்றும் திரு ஏட்ரியன் நம்புகிறார்.

 

Loading...
Load next