சிங்கப்பூரின் வறட்சிநிலை சில மாதங்களுக்கு நீடிக்கும்

சிங்கப்பூரில் வறட்சி நிலவுவதற்கான தெளிவான அடையாளங்களாக வாடிப்போன புல், வறண்ட நிலம், குளங்களிலும் நீர்த்தேக்கங்களிலும் தாழ்வான நீர்மட்டம் ஆகியன இப்போது காணப்படுகின்றன. “இந்தியப் பெருங்கடல் டய்போல்” எனும் “நினோ” பருவநிலை இதற்கான காரணம் என நம்பப்படுகிறது. 

இந்தியப் பெருங்கடலின் கடல்மட்டப் வெப்பநிலையிலும் காற்றுமண்டல அழுத்தத்திலும் ஏற்படும் மாற்றங்களால், தென்கிழக்காசியா ஏகிலும் வெப்பம் அதிகரித்து, வறட்சியான பருவநிலை நிலவுகிறது. 

இந்நிலை எதிர்வரும் சில மாதங்களுக்கு நீடிக்கும் என சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.  சென்ற மாதம், சாங்கியிலுள்ள பருவநிலை நிலையத்தில் பதிவான மொத்த மழை, நீண்டகாலச் சராசரி அளவைவிட 92 விழுக்காடு குறைவு. அதோடு, கடந்த ஜூலை மாதம் சிங்கப்பூரின் ஆகச் சூடான இரண்டாவது ஜூலை மாதமாக இருந்தது. ஜூலையின் சராசரி வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்.

பாசிர் ரிஸ் பூங்காவிலுள்ள இந்த குளம் வற்றிப்போயுள்ளது. முன்பு அந்தக் குளத்தில் அல்லி மலர்கள் நிறைந்திருந்தன. (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)
பாசிர் ரிஸ் பூங்காவிலுள்ள இந்த குளம் வற்றிப்போயுள்ளது. முன்பு அந்தக் குளத்தில் அல்லி மலர்கள் நிறைந்திருந்தன. (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

சூடான வெப்பநிலையால் பிடோக் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் சற்றே குறைந்திருப்பதாகப் பொதுப் பயனீட்டுக் கழகத்தின் பேச்சாளர் தெரிவித்தார். வறட்சியான மாதங்களில் நீர்மட்டம் குறையும்போது, புதுநீருடன் நீர்த்தேக்கங்களைக் கழகம் நிரப்பி, நீர்மட்டத்தை ஆரோக்கியமான அளவில் நிலைநாட்டும் என்றும் அவர் தெரிவித்தார். 

அண்மைக்காலமாக நிலவும் வறட்சி, பருவநிலை மாற்றத்தின் அறிகுறியா எனக் கேட்டபோது, “வறட்சியான பருவநிலைக்கும் பருவநிலை மாற்றத்திற்கும் தொடர்பு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த மேற்கொண்டு ஆய்வு செய்யப்படவேண்டும்,” என்றார் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் வின்ஸ்டன் சூ. சிங்கப்பூர் இதற்கு முன்பும் இதுபோன்ற வறட்சிக்காலங்களை அனுபவித்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.