விருது பெறும் தமிழாசிரியர்கள்

திருமதி காத்தாயம்மாள் செல்லையா பீட்டர், செட்டி மலாக்கா சமூகத்தைச் சேர்ந்தவர். வீட்டில் தமிழ்ப் புழக்கமே இல்லை. ஆனால் இவர் ஒரு தமிழ் ஆசிரியராக வேண்டும் என முடிவெடுத்தது யாவரும் எதிர்பார்த்திடாத ஒன்று.

கலைமகள் தொடக்கப்பள்ளியில் பயிலும்போது சக மாணவர்கள் திருமதி பீட்டரை கேலி செய்வர். ஏனெனில், தமிழில் பேசுவதே இவருக்கு பெரும்பாடாக இருந்தது.

உயர்நிலைப் பள்ளிப் பருவத்தில், உமறுப் புலவர் உயர்நிலைப் பள்ளியில் பயிலும்போதும் இவரைப் பற்றி ஏளனமாக பேசும் போக்கு தொடர்ந்தது.

சளைக்காமல் சாதித்துக்காட்ட வேண்டும் என்ற முனைப்பில் அவர் ‘ஜிசிஇ’ சாதாரண நிலை தேர்வில் தமிழ்மொழிப் பாடத்தில் தேர்ச்சி பெற்று, மறுஆண்டு ஆசிரியர் பயிற்சிக்குச் சென்று, 1967ல் பார்ட்லி தொடக்கப் பள்ளியில் தமிழ் மொழியைக் கற்பிக்க ஆரம்பித்தார்.

வெவ்வேறு தொடக்க, உயர்நிலைப் பள்ளிகள், கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பாடத்திட்ட வரைவுப் பிரிவு என கிட்டத்தட்ட 52 ஆண்டுகளுக்குச் சேவையாற்றிய ஆசிரியர் திருமதி பீட்டர், இவ்வாண்டு பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.

தமது மாணவர்களில், குறைந்தது 10 பேராவது தமிழ் ஆசிரியர் பணியில் தற்போது ஈடுபடுகின்றனர் என்பதில் பெருமிதம் கொள்கிறார் இந்த அனுபவசாலி.

‘‘ஆசிரியர் பணி என்னை முழுமைப்படுத்தியுள்ளது. இளம் வயதில் இல்லாத பொறுமை, சகிப்புத்தன்மை போன்ற பண்புகளை எனக்குள் புகுத்தும் விதமாக இப்பணி அமைந்தது. ஆசிரியர் பணியை ஒரு வேலையாக பார்க்கக்கூடாது, மாணவர்களிடையே மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற முழு ஈடுபாடு எப்போதும் வேண்டும்,’’ என்று தெரிவித்தார் பார்ட்லி உயர்நிலைப் பள்ளியிலிருந்து தமிழாசிரியரான திருமதி பீட்டர், 70.

இவர் இவ்வாண்டின் நல்லாசிரியர் விருது நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற வாழ்நாள் சாதனையாளர்களில் ஒருவர்.

தங்கள் பணியில் சிறந்தோங்கும் தமிழ் ஆசிரியர்களை 2002ஆம் ஆண்டிலிருந்து கெளரவித்து அவர்களுக்கு விருது வழங்கி உற்சாகம் அளித்து வருகிறது தமிழ் முரசு.

இந்த உன்னத விருதை பெறும் மற்றோர் ஆசிரியர் இவருடன் அதே காலகட்டத்தில் உமறுப் புலவர் உயர்நிலைப் பள்ளியில் பயின்ற 71 வயது திரு அண்ணாமலை விஸ்வலிங்கம்.

1972ல் கேன்டோன்மண்ட் தொடக்கப்பள்ளியில் இவர் தமது ஆசிரியர் பணியைத் தொடங்கி, இன்று வரையிலும் செயிண்ட் ஆண்ட்ரூஸ் உயர்நிலைப் பள்ளியில் இவரின் அயராத உழைப்பு நீடிக்கிறது.

1970, 1980களின் காலகட்டத்தை ஒப்பிடுகையில், தற்போதைய காலகட்டத்தில் மாணவர்கள் சொல்லிக்கொடுப்பது சற்று சவாலான காரியம். ஏனெனில் தற்போது தமிழ்ப் புழக்கம் வீட்டில் குறைந்துவிட்டது என்று அவர் சுட்டினார்.
தொடக்கத்தில் சொல்வளத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்றும் இப்போது பேச்சு தமிழுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது என்றும் அவர் விளக்கினார்.

தம்மிடம் படித்த மாணவர்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலையை எட்டி அவரை சந்திக்கும் தருணங்கள் சொல்லில் அடங்காத மனதிருப்தியை கொடுப்பதாகவும் இது போன்ற உணர்வுகள் மற்ற வேலையிடங்களில்கிடைக்காது என்றும் திரு விஸ்வலிங்கம்குறிப்பிட்டார். கற்றதையும் எண்ணங்களையும் பிறருடன் பகிர்ந்துகொள்ளும் தன்மை ஆசிரியர் பணிக்கு தனித்துவம் வாய்ந்தது என்பது இவரின் கருத்து.

மொழிப்பற்றுடன் கற்றுக்கொடுக்கும் தன்மை தமிழ் ஆசிரியர்களுக்கு முக்கியமானது என்று தெரிவித்த திரு விஸ்வலிங்கம், பணிக்கு அப்பால் ஆசிரியர்கள் சமுதாயத்திற்கு தொண்டு செய்யவும் முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

‘‘மொழிப்பற்றுடன் கற்றுத்தருவது உள்ளத்திலிருந்து வரவேண்டும். பண்பு நலன்கள், கலாசார, பண்பாட்டு அம்சங்கள் போன்றவற்றை கற்றலில் உள்ளடக்கும்போது, மாணவர்கள் மொழியின் ஆழத்தை உணருவர்,’’ என்று கூறினார் திரு விஸ்வலிங்கம்.

தமது நான்கு பிள்ளைகளில் இரண்டாவது மகள், இவரின் பாதையைப் பின்தொடர்ந்து தமிழ் ஆசிரியராகப் பணிபுரிகிறார்.

வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் மூவரில் ஆசிரியர் சு. நல்லுராஜ் குடும்பத்தினர், தலைமுறை தலைமுறையாக ஆசிரியர் பணியில் பங்களித்து வருகிறார்கள்.

காலமான அவரது தந்தை ரா.சுப்பையா நாயுடு ஒரு முன்னோடி தமிழாசிரியர். அவரின் தங்கை மார்சிலிங் தொடக்கப்பள்ளியில் தமிழாசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்.

திரு நல்லுராஜின் மகனும் மருமகளும் ஆசிரியராக தற்போது பணியாற்றுகிறார்கள்.

இளைய தலைமுறையினருக்கு தமிழ் மொழியின் சிறப்பையும் அதைக் கட்டிக்காக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தும் ஒரு பொறுப்பு தமக்கு இருக்கிறது என்பதுதான் ஆசிரியர் பணியில் உற்சாகத்துடன் ஈடுபடுவதற்கு முக்கிய காரணங்களாக விளங்குகின்றன என்று திரு நல்லுராஜ் கூறினார்.

மொழியின் அடிப்படைக் கூறுகளை முதலில் போதித்து தமிழ்மொழி மூலம் அவர்கள் பெறக்கூடிய வாழ்வியல் நெறிகளுடன் உலக, நாட்டு நடப்புகளையும் பாடங்களோடு இணைத்து கற்பிப்பது இவரின் கற்பித்தல் பாணியாகும்.

தெமாசெக் தொடக்கப்பள்ளியில் 1985ஆம் ஆண்டில் தொடங்கிய ஆசிரியர் பயணத்தில் தம்மை படிப்படியாக மேம்படுத்திக்கொண்டு தெம்பனிஸ் தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கும் இவர் ஆசானாக இருந்தார்.

ஆசிரியர் பணிக்கு அப்பால், சிங்கப்பூரில் நடந்த உலகத் தமிழாசிரியர் மாநாடுகளில் இவர் தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பையும் ஏற்றுள்ளார்.

ஆசிரியர் பணியிலிருந்து 2017 ஆண்டு ஓய்வு பெற்றிருந்தாலும் தொடர்ந்து பகுதி நேரமாக தொடக்கக் கல்லூரியில் கற்பித்தவாறு சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தின் நிர்வாக அலுவலராக இவர் பொறுப்பு வகிக்கிறார்.

தமிழ் மொழியைப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு அதன் முக்கியத்துவத்தை உணர்த்த பெற்றோர், ஆசிரியர், சமூகம் என அனைவரும் ஒன்றாக செயல்படவேண்டுமென்று திரு நல்லுராஜ் வலியுறுத்தினார்.

தமிழ் முரசு நாளிதழும் கல்வி அமைச்சின் தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவும் இணைந்து சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தின் ஆதரவுடன் நடத்தும் நல்லாசிரியர் விருது இன்று (ஆகஸ்ட் 31ஆம் தேதி) உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடைபெறுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!