உலகத் தரவரிசையில் என்யுஎஸ் சறுக்கியது, என்டியு முன்னேறியது

டைம்ஸ் உயர்கல்வி தரவரிசையில் ஆசியாவின் ஆகச்சிறந்த பல்கலைக்கழகமாகத் தொடர்ந்து 3 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (என்யுஎஸ்), சென்ற ஆண்டு சீனாவின் சிங்ஹுவா பல்கலைக்கழகத்திடம் முதலிடத்தைப் பறிகொடுத்தது.  இவ்வாண்டின் அனைத்துலக தரவரிசையில், என்யுஎஸ் இரண்டு இடங்கள் சறுக்கி, முந்திய 23வது நிலையிலிருந்து 25வது நிலைக்கு இறங்கியது. என்யுஎஸ்ஸுக்கு மேலே சிங்ஹுவா பல்கலைக்கழகத்திற்கு அடுத்தபடியாக சீனாவின் பீக்கிங் பல்கலைக்கழகமும் இடம்பிடித்திருந்தது. 

ஆனால், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மூன்று இடங்கள் முன்னேறி 48வது இடத்தைப் பிடித்திருப்பதாக இன்று காலை வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியல் காட்டுகிறது. 

(படம்: இபிஏ-இஎஃப்இ)
(படம்: இபிஏ-இஎஃப்இ)

“ஒரு சிறிய நாடு, உலகின் தலைசிறந்த 50 பல்கலைக்கழகங்களில் இரண்டைக் கொண்டிருப்பது அற்புதமான சாதனை. ஆயினும், முன்னணி பல்கலைக்கழகங்களில் பெருமளவு முதலீடு செய்யும் சிங்கப்பூர்கூட சீனாவின் எழுச்சிக்கு விதிவிலக்கல்ல என்பதை என்யுஎஸ்ஸின் சறுக்கல் காட்டுகிறது,” என்றார் டைம்ஸ் உயர்கல்வி தரவரிசை தொகுப்பாளர் குமாரி எல்லி பொத்வெல். 

என்யுஎஸ் தரவரிசையில் இறங்கியிருந்தாலும், அதன் சிறப்பு எந்த விதத்திலும் குறைந்துவிடவில்லை என்று டைம்ஸ் உயர்கல்வி தரவரிசையின் தலைமை அறிவாற்றல் அதிகாரி ஃபில் பெடி கூறினார். 

“சீனாவின் தலைசிறந்த இரண்டு பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து அசாதாரணமான முன்னேற்றம் அடைந்துவருவதே இதற்குக் காரணம்,” என்றார் அவர். 

“ஆசியாவின் மூன்று பிரசித்திபெற்ற பல்கலைக்கழகங்களுக்கும் இடையிலான வேறுபாடு மிகவும் சொற்பம்,” என்றும் அவர் குறிப்பிட்டார். 

உலகத் தரவரிசையில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகம் இடம்பெறுகிறது. கலிஃபோர்னிய தொழில்நுட்பக் கழகம் ஐந்தாவது நிலையிலிருந்து இரண்டாவது நிலைக்கு உயர்ந்திருக்கிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், ஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழகம், மசாசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகம் ஆகிய மூன்றும் ஓரிடம் சறுக்கு முறையே மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது இடத்தில் இருந்தன. 

தலைசிறந்த 200 பல்கலைக்கழகங்களில் 60 பல்கலைக்கழகங்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவை. 

இந்த ஆண்டின் தரவரிசையில் 92 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1,400 பல்கலைக்கழகங்கள் மதிப்பிடப்பட்டன.