மற்றொருவரின் கடன்பற்று அட்டையைப் பயன்படுத்திப் பொருட்களை வாங்கிய பெண்கள் கைது

தொலைந்துபோன கடன்பற்று அட்டையைக் கண்டெடுத்து, அதனைப் பயன்படுத்தி பல்வேறு கடைகளிலிருந்து பொருட்களை வாங்கிய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவருக்கு 26 வயது, மற்றொருவருக்கு 60 வயது.

கடன்பற்று அட்டையின் உரிமையாளர் அதனை எப்படித் தொலைத்தார் என்ற விவரம் அறியப்படவில்லை. ஆயினும், அட்டையைக் கண்டெடுத்த அந்தப் பெண்கள், அதனை அதிகாரிகளிடம் ஒப்படைக்காமல்  தங்களுக்குத் துணிமணிகள், கைப்பைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்கிக்கொண்டனர். இதற்காக அவர்கள் அந்த அட்டையிலிருந்து மொத்தம் 1,500 வெள்ளி செலவு செய்தனர்.

(படம்: சிங்கப்பூர் போலிஸ் படை)
(படம்: சிங்கப்பூர் போலிஸ் படை)

அட்டையைத் தொலைத்தவர், தமது வங்கிக் கணக்கிலிருந்து பணம் பறிபோனதை அறிந்த உடனே அது குறித்து போலிசாரிடம் தெரிவித்தார்.  அதன் பின்னர் விசாரணையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட சந்தேக நபர்கள் கைதாகினர்.

வெள்ளிக்கிழமை (13 செப்டம்பர்) அந்தப் பெண்கள்  நீதிமன்றத்தில்  குற்றம் சாட்டப்படுவர். மோசடிக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 10 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையுடன் அபராதம் விதிக்கப்படலாம்.