சுடச் சுடச் செய்திகள்

டெப்போ ரோடு விபத்து: சிறுவனுக்கு கோயிலில் சிறப்பு வழிபாடு

டெப்போ ரோடு ஸ்ரீ ருத்ரகாளியம்மன் ஆலயம் அருகில் உள்ள டெப்போ வாக் எனும் குறுஞ்சாலையில் அக்டோபர் 5ஆம் தேதி நடந்த விபத்து குறித்த காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டதைத் தொடர்ந்து அந்த ஆலயம் சிறுவனுக்காக சிறப்பு வழிபாடுகளைச் செய்தது. 

இவ்வாரம் செவ்வாய்க்கிழமையன்று (அக்டோபர் 8ஆம் தேதி), ஆலயத்தின் தலைவரான திரு அழகப்பனும் ஆலயத்தைச் சேர்ந்த அர்ச்சகர் ஒருவரும் அந்தக் குடும்பத்தைச் சந்திக்கச் சென்றனர். அந்த நேரத்தில் அவர்கள் அக்குடும்பத்திடம் காணொளியில் ஏற்பட்ட சம்பவத்தைப் பற்றி பேசி விவரம் பெற்றுகொண்டனர். 

சிவப்பு கார் ஒன்று சிறுவனை மோதுவதும், அதன் பிறகு அந்தச் சிறுவன் நல்ல நிலையில் எழுந்து நிற்பதும் அந்தக் காணொளியில் தெரிந்தது. 

ஆனால் அதன் பின்னர் நடந்த கதையை தமிழ் முரசிடம் விளக்கினார் திரு அழகப்பன். 

“ஓட்டுநர்தான் அந்த அடிப்பட்ட சிறுவனையும் தாயாரையும் தமது காரில் ஏற்றிக்கொண்டு ஆலயத்திற்கு அருகே உள்ள அலெக்சாண்டரா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அந்த நேரத்தில் சிறுவன் நடந்தது அறியாமல் மகிழ்ச்சியாக ‘கணபதி பாப்பா’ என்ற இறைப்பாடலை பாடிகொண்டு இருந்தார்,” என்றார் திரு அழகப்பன். 

விபத்துக்குப் பிறகு ஓட்டுநர் சற்று நடுக்கத்தில் இருந்தாலும் சிறுவனின் தாயார் வழங்கிய ஆறுதலால் சுமூகமாக காரை ஒட்டிச் சென்று மருத்துவமனையில் சிறுவனைச் சேர்த்தார் என்று தமிழ் முரசு அறிகிறது. 

அலெக்சாண்டரா மருத்துவமனையில் சிறார்களுக்கான தனிப்பட்ட பிரிவு இல்லாததால் அங்கு அந்தச் சிறுவனுக்கு முதலுதவி மட்டும் வழங்கப்பட்டது. 

பின்னர் அந்த மருத்துவமனையின் முதலுதவி வண்டி ஒன்று அந்தச் சிறுவனை தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குச் அழைத்து சென்றது. அங்கு அனுமதிக்கப்பட்ட  சிறுவனுக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. 

“சிறுவனுக்குச் சிறு காயங்கள்தான் ஏற்பட்டன. வலது காதுக்குப் பின்னால் உள்ள தலைப் பகுதியில் இரண்டு தையல்கள் உள்ளன. ஆனால் சிறுவன் அந்த வலியையும் உணராது சுறுசுறுப்பாக இருக்கிறார். நான் அவரைப் பார்க்க சென்றபோது குதூகலமாக விளையாடிகொண்டிருந்தார்,” என்றார் திரு அழகப்பன்.    

(முழு விவரம் அக்டோபர் 13ஆம் தேதி முரசில்)