சிறுவனுக்காக கோயிலில் சிறப்பு வழிபாடு

டெப்போ ரோடு ஸ்ரீ ருத்ரகாளியம்மன் ஆலயத்துக்கு அருகில் உள்ள டெப்போ வாக் குறுஞ்சாலையில் அக்டோபர் 5ஆம் தேதி நடந்த விபத்து குறித்த காணொளி சமூக ஊடகங்களில் வெகுவாகப் பகிரப்பட்டதைத் தொடர்ந்து அந்த ஆலயம் சிறுவனுக்காக சிறப்பு வழிபாடுகளைச் செய்தது. 

கடந்த செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 8), ஆலயத்தின் தலைவரான திரு வீ. அழகப்பனும் ஆலயத்தைச் சேர்ந்த அர்ச்சகர் ஒருவரும் அந்தக் குடும்பத்தைச் சந்திக்கச் சென்றனர். அந்த நேரத்தில் அவர்கள் அக்குடும்பத்திடம் காணொளியில் பதிவான சம்பவத்தைப்பற்றிப் பேசி விவரம் பெற்றுக்கொண்டனர். 

சிவப்பு நிற கார் ஒன்று சிறுவனை மோதுவதும், அதன் பிறகு அந்தச் சிறுவன் எழுந்து நிற்பதும் அந்தக் காணொளியில் தெரிந்தது. 

ஆனால், அதன் பின்னர் நடந்த வற்றை தமிழ் முரசிடம் விளக்கினார் திரு அழகப்பன் (படம்: எஸ்டி). 

“சிறுவனை மோதிய காரின் ஓட்டுநர்தான் அடிபட்ட சிறுவனையும் அவனது தாயாரையும் தமது காரில் ஏற்றிக்கொண்டு ஆலயத்திற்கு அருகே உள்ள அலெக்சாண்ட்ரா மருத்துவமனைக்குச் சென்றார்,” என்றார் திரு அழகப்பன். 

விபத்துக்குப் பிறகு ஓட்டுநர் சற்று நடுக்கத்தில் இருந்தாலும் சிறுவனின் தாயார் வழங்கிய ஆறுதலால் சுமுகமாக காரை ஒட்டிச் சென்று மருத்துவமனையில் சிறுவனைச் சேர்த்தார் என்று தமிழ் முரசு அறிகிறது. 

அலெக்சாண்டரா மருத்துவமனையில் சிறுவனுக்கு முதலுதவி வழங்கப்பட்டது. 

பின்னர் அந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சை வாகனம் ஒன்று அந்தச் சிறுவனை தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அழைத்து சென்றது. அங்கு அனுமதிக்கப்பட்ட  சிறுவனுக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. 

ஸ்ரீ ருத்ரகாளியம்மன் ஆலயத்தின் தலைவர் திரு வீ. அழகப்பன்
ஸ்ரீ ருத்ரகாளியம்மன் ஆலயத்தின் தலைவர் திரு வீ. அழகப்பன்

“சிறுவனுக்குச் சிறு காயங்கள்தான் ஏற்பட்டன. காதுக்குப் பின்னால் உள்ள தலைப் பகுதியில் இரண்டு தையல்கள் போடப்பட்டுள்ளன. ஆனால் சிறுவன் அந்த வலியையும் உணராது சுறுசுறுப்பாக இருக்கிறார். நான் அவரைப் பார்க்க சென்றபோது குதூகலமாக விளையாடிக்கொண்டிருந்தார்,” என்றார் திரு அழகப்பன்.    

 

கோயிலின் அருகே வாகனங்கள் சட்டவிரோதமாக  நிறுத்தப்படுவதே இந்தப் பிரச்சினைக்கு மூலக் காரணம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

டெப்போ ரோடு ஸ்ரீ ருத்ரகாளியம்மன் ஆலயம் அருகில் உள்ள குறுஞ்சாலையில் வாகனம் நிறுத்தப்படும் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்று வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் ஹங் கியாங் தெரிவித்துள்ளார்.

ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு நான்கு பிரதான கார் நிறுத்த வசதிகள் உள்ளன. ஆலயத்திற்கு அருகே உள்ள வீவக குடியிருப்பு கார் நிறுத்தம், கோயிலின் கீழ்த்தளம், கோயிலின் பின்புறத்தில் டெப்போ லேன், புளோக் 4001, 4002களுக்கு இடையே, சீ டியேன் டியேன் ஆலயத்தின் பக்கத்தில் திறந்தவெளி கார் நிறுத்துமிடம் ஆகியவற்றில் வாகன நிறுத்த வசதிகள் இருக்கின்றன.

“வசதிக்காக கோயிலுக்கு வெளியே வாகனங்களை நிறுத்துவதன் விளைவைப் பார்த்துவிட்டோம். இனிமேலாவது இப்பகுதிக்கு வரும் மக்கள், முறையான கார் நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். வசதிகளுக்கு இங்கு பஞ்சம் இல்லை,” என்றார் திரு அழகப்பன்.