சிங்கப்பூரும் மெக்சிகோவும் புதிய ஒத்துழைப்பு உடன்பாடுகள் பலவற்றில் கையெழுத்திட்டு உள்ளன. பிரதமர் லீ சியன் லூங், மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபெஸ் ஓப்ரடார் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பைத் தொடர்ந்து உடன்பாடுகள் கையெழுத்திடும் சடங்கு நடைபெற்றது. ஐந்து சிங்கப்பூர் அமைப்புகள் மெக்சிகோவின் அவற்றுக்கு இணையான அமைப்புகளுடன் உடன்பாடுகளில் கையெழுத்திட்டன.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகமும் முதலீட்டு ஒத்துழைப்பும் வளர்ந்து வருவதை சிங்கப்பூர், மெக்சிகோ தலைவர்கள் வரவேற்றனர்.நீர்வள நிர்வாகத்தில் பெரிய அளவிலான ஒத்துழைப்பை வளர்ப்பது, அறிவியல், தொழில்நுட்பத்தில் அணுக்க ஒத்துழைப்பு, அனைத்துல மேம்பாட்டு அணிசேர்ப்புக்கான வணிக ஒப்பந்தத்தை புதுப்பித்தல், நோய்த்தொற்று உள்ளிட்ட எல்லைதாண்டிய விவகாரங்களை எதிர்கொண்டு சமாளித்தல் போன்றவற்றுக்கான உடன்பாடுகள் அவை.

சிங்கப்பூருக்கும் பசிபிக் நட்பு நாடுகளுக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக உடன்பாட்டுக்கான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவுபெறுவதை இரு நாட்டுத் தலைவர்களும் எதிர்பார்க்கின்றனர். அத்துடன் உடன்பாட்டுக்கான நடைமுறைகளை இவ்வாண்டில் முடித்துவைக்கும் நோக்கத்தை அவர்கள் ஆதரிப்பதாகவும் இருநாட்டின் கூட்டறிக்கை தெரிவித்தது.
பசிபிக் நட்பு நாடுகள் என்பவை சிலி, கொலம்பியா, மெக்சிகோ, பெரு ஆகிய நான்கு லத்தின் அமெரிக்கா நாடுகள் ஆகும். உலகின் எட்டாவது பெரிய பொருளியல் வட்டாரம் இது. சிங்கப்பூருக்கும் மெக்சிகோவுக்கும் இடையிலான வர்த்தகமும், முதலீட்டு ஒத்துழைப்பும் அண்மைய ஆண்டுகளாக நல்ல வளர்ச்சி கண்டுள்ளன. கடந்த ஆண்டில் இருதரப்பு வர்த்தகம் $4.7 பில்லியன் என்ற அளவுக்கு வளர்ந்தது. இதன்மூலம் லத்தின் அமெரிக்காவில் சிங்கப்பூரின் இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளியாக மெக்சிகோ உருவெடுத்தது.

சிங்கப்பூருக்கும் மெக்சிகோவுக்கும் இடையிலான தூதரக உறவு அடுத்த ஆண்டில் 45வது ஆண்டைத் தொடுகிறது. இதனை முன்னிட்டு இருதரப்பு உறவுகளை வளர்ப்பதற்கான சந்திப்புகள் அடிக்கடி நடைபெற உள்ளன.