தமிழ்க் கலைகளின் மின்னிலக்க ஆவணம் தமிழ் சமூகத்தின் பங்களிப்பைப் பிரதிபலிப்பதாகவும் சிங்கப்பூரின் அனைத்து இனத்தவருக்குமான கலாசாரப் பொக்கிஷமாகவும் திகழ்வதாகக் கூறியுள்ளார் மூத்த அமைச்சரும் சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு தர்மன் சண்முகரத்னம்.
தமிழ் மின்மரபுடைமைத் திட்டம் போன்ற சமூகத்தால் முன்னெடுக்கப்படும் முயற்சிகள் சிங்கப்பூரின் வரலாற்றையும் அடையாளத்தையும் மேலும் புரிந்துகொள்ள உதவுவதாகவும் அவர் கூறினார்.
சிங்கப்பூர்த் தமிழ் நடனங்களை மின்னிலக்கப் படுத்தும் முயற்சி சென்ற ஆண்டு தொடங்கப்பட்டது.
அதன் நிறைவைக் குறிக்கும் வகையிலும் ஒட்டுமொத்தமாக இலக்கியம், மேடை நாடகம், இசை, நடனம் என சிங்கப்பூர்த் தமிழ்க் கலைகளின் மின்னிலக்க ஆவணங்களை உருவாக்கும் ஆறாண்டு முயற்சியின் நிறைவாகவும் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சி விளங்கியது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு திரு தர்மன் பேசினார்.
கடந்த 2013ல் தொடங்கப்பட்ட சிங்கப்பூர்த் தமிழ் மின்மரபுடைமைத் திட்டத்தை தேசிய நூலக வாரியத்துடன் இணைந்து சிங்கப்பூர் தமிழ்ப் பண்பாட்டு மையம் வழிநடத் தியது. மையத்தின் புரவலர் தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
“சமூகப் பதிவுகளும் மரபுடைமைப் பொருட்களும் நமது வரலாற்றுக் கதைகள் தொலைந்து போகாமல் காக்கின்றன. மேலும் அவை தங்கள் சுய பாரம்பரியத்தை ஆராய்வதிலும் கொண்டாடுவதிலும் தனிநபர்களுக்கு ஊக்கமும் வலுவும் தருகின்றன,” என்று அமைச்சர் ஈஸ்வரன் கூறினார்.
சமூகக் குழுவால் இத்திட்டம் தொடங்கப்பட்டது மனநிறைவை அளிப்பதாகவும் இலக்கியம், நாடகம், இசை, நடனம் ஆகிய பல்வேறு துறைகளில் உள்ளவர்களை அணுகி ஆவணங்களைத் திரட்டியுள்ளது மகிழ்ச்சி தருவதாகவும் அவர் கூறினார்.
“பிரபல எழுத்தாளர்கள், நாடகக் கலைஞர்களின் நன்கொடைகள்தான் சிங்கப்பூர்த் தமிழ்க் கலைகள் குறித்த விலைமதிப்பற்ற களஞ்சியத்தைச் சாத்தியமாக்கியுள்ளது,” என்றார் அவர்.
ஆறாண்டு காலத்தில் நான்கு மின்தொகுப்புகளை உருவாக்கியதற்கு மூலதனமாக அமைந்தது துடிப்பான குடிமைச் செயல்பாடுதான் என்று கூறினார் சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் இயக்குநர் திரு அருண் மகிழ்நன்.
“எடுத்ததெற்கெல்லாம் அரசு என்ன செய்யும் என்று எதிர்பார்த்து நிற்காமல் சமூகத்திற்கும் அரசுக்கும் நாம் என்ன செய்ய முடியும் என்ற கேள்வியை முன்வைத்தோம்,” என்று கூறிய திரு அருண் மகிழ்நன், அதன் பயனே இந்த மின்தொகுப்புத் திட்டத்தின் நிறைவு என்றார்.
“இந்த முயற்சியை 2013ல் தொடங்கியபோது எந்த அளவுக்கு அது விஸ்வரூபம் எடுக்கப்போகிறது என்று தெரியாது. ஆனால் இரண்டே ஆண்டுகளில் இலக்கியத்தை மின்மயமாக்கும் திட்டத்தை நிறைவுசெய்தோம். கிட்டத்தட்ட 350 தமிழ் நூல்கள் மின்மயமாக்கப்பட்டன. தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் மேடை நாடகம், இசை, நடனம் என ஒவ்வோர் ஆண்டும் ஒரு மின்தொகுப்புத் திட்டம் உருவானது,” என்றார் தேசிய நூலக வாரியத்தின் தமிழ்ச் சேவைகள் பிரிவின் தலைவர் திரு அழகியபாண்டியன்.
நேற்று நடந்த நிகழ்ச்சியில் தமிழ்ப் பண்பாடு குறித்த இணையத்தளம் அறிமுகம் கண்டது. “சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாடு: வேர்களும் வழித்தடங்களும்” எனும் அந்த இணையத்தளம் சிங்கப்பூரில் தமிழ்ப் பண்பாட்டை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் விதத்தில் அமைந்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக 14 தமிழ் ஆசிரியர்கள் இந்த இணையத் தளத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறினார் சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் உறுப்பினர் தமிழ் ஆசிரியருமான திரு சுப்பிரமணியம் நடேசன்.