அறநிறுவனங்கள் மீதான நம்பிக்கையை உயர்த்தும் விருது

முறையான நிர்வாகத்திற்கும் தகவல் வெளிப்படுத்தல் தன்மைக்கும் 67 அறநிறுவனங்கள் ‘அறநிறுவன வெளிப்படைத்தன்மை மற்றும் நிர்வாகமுறைக்கான விருதுகள் 2019’ நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்பட்டன.

கடந்த ஆண்டைவிட இம்முறை 20 கூடுதலான அமைப்புகள் விருது பெற்ற இந்நிகழ்வில் கலாசார, சமூக, இளையர் அமைச்சர் கிரேஸ் ஃபூ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். 

“நல்ல நிர்வாகம், தகவல் வெளியீட்டு முறைகள் மூலம் அறநிறுவனங்கள் தங்களின் நன்கொடைகளைத் தேவையான காரணங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன என்ற நம்பிக்கை பொதுமக்களுக்குக் கிடைக்கிறது. இன்னும் அதிகமான அறநிறுவனங்கள் நல்ல தகவல் வெளியீடு மற்றும் நிர்வாக முறைகளைக் கையாளுகின்றன என்பதை மனநிறைவுடன் தெரிவிக்கிறேன்,” என்றார் அமைச்சர் கிரேஸ் ஃபூ. 

அறநிறுவன மன்றம் ஏற்பாடு செய்யும் இந்த வருடாந்திர விருதுகளுக்கு இவ்வாண்டு கிட்டத்தட்ட 950 அறநிறுவனங்கள் மதிப்பிடப்பட்டன. சென்ற ஆண்டு இந்த எண்ணிக்கை ஏறத்தாழ 800ஆக இருந்தது.  விருது பெற்ற 67 அறநிறுவன அமைப்புகளில் ஒன்று ஸ்ரீ நாராயண மிஷன். தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இவ்வமைப்பு அறநிறுவன வெளிப்படைத்தன்மை விருதைப் பெறுகிறது. 

“அறநிறுவனங்களின் செயல்பாட்டில் பொதுமக்களின் நம்பிக்கை முக்கிய அம்சம் வகிக்கிறது. அந்த நம்பிக்கையை ஈட்டுவதற்கு உயர்ந்த தரத்தில் சேவைகளை நிலைநாட்டுவது அவசியம். நமது அமைப்பின் தரமான வெளிப்படைத்

தன்மையை இவ்விருது பறைசாற்றுகிறது,” என்றார் ஸ்ரீநாராயண மிஷன் தலைமை நிர்வாக அதிகாரி திரு எஸ் தேவேந்திரன். 

இவ்விருது மூலம் ஸ்ரீ நாராயண மிஷன் மீது இருக்கும் நம்பிக்கை அதிகரிக்கும் என்றும் அனைத்து சமூக அமைப்புகளும் இதுபோன்ற நம்பிக்கைத் தன்மையைப் பெற இலக்கு கொள்ளவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.