குதூகலத்துடன் தமிழைக் கற்க ஒரு சுற்றுலா

வகுப்பறைக்கு அப்பாற்பட்ட குதூகலம் நிறைந்த வெளியுலகச் சூழல்களில் நூற்றுக்கும் அதிகமான தொடக்கநிலை மாணவர்கள் தமிழைப் பயன்படுத்தி கற்றல் அனுபவத்தைப் பெற்றனர்.

நேற்று முன்தினம் நடந்த ‘தமிழில் ஒரு சுற்றுலா’ என்ற அந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற மாணவர்கள் மூன்று இடங்களுக்குச் சென்று பயிற்சிகளில் ஈடுபட்டனர்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 120 மாணவர்கள், மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு தேசிய கலைக்கூடம், எம்டிஐஎஸ் இசை அரங்கு, ‘யாக்குல்ட்’ ஆரோக்கிய பானத் தொழிற்சாலை ஆகிய இடங்களுக்குச் சென்றனர். ஒவ்வொரு குழுவிலும் உள்ளூர் பிரபலம் ஒருவரும் பிள்ளைகளை வழிநடத்த நான்கு வழிகாட்டிகளும் இடம்பெற்றனர்.

தேசிய கலைக்கூடத்தில் சிங்கப்பூரின் வரலாற்றுத் தகவல்களைப் பற்றி மாணவர்கள் கற்றுக்கொண்டனர். பழைய சிங்கப்பூரைப் பற்றிய கதைகள், அங்குள்ள காட்சிப் பொருட்களின் மூலம் அவர்களுக்கு விளக்கப்பட்டன.

அத்துடன், அங்குள்ள கலைப்பொருட்களின் உட்பொருளை விளக்குவதற்காக மாணவர்கள் தங்களது கற்பனைக் கண்களைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்பட்ட

னர். ‘காராங் குனி பாய்’ என்ற ஆங்கிலப் புத்தகம் பற்றிய விளக்கங்களும் இதில் இடம்பெற்றன.

எம்டிஐஎஸ் இசை அரங்கில் இசைக்கலைஞர் கலாசரண், 39, இசைப்பதிவு அரங்கில் பின்னணி இசையமைப்பு பற்றி மாணவர்களிடம் விளக்கினார்.

அந்த மாணவர்கள் கொடுக்கும் வார்த்தைகளையும் வரிகளையும் பாடலாக மாற்றி அவர்களை மகிழ்வித்தார் திரு கலாசரண். இசையுடன் கலந்திருக்கும் உணர்வுகளைப் பற்றி பேசவும் மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

மூன்றாவது பயண இடமான செனோக்கோ ரோட்டிலுள்ள ‘யாக்குல்ட்’ ஆரோக்கிய பானம் தயாரிக்கும் பணிமனைக்குச் சென்ற மாணவர்கள், அந்த பானத்தைப்பற்றி மேலும் தெரிந்துகொண்டனர். நுண்ணுயிர், நுண்ணோக்கி, புரதம் போன்ற சில அறிவியல் சொற்களைத் தெரிந்துகொண்டதுடன் அந்தத் தொடக்கப்பள்ளி மாணவர்கள் பணிமனையைச் சுற்றிப் பார்த்தனர்.

தமிழ் எங்கும் இருக்கும் மொழி, சுற்றியுள்ள அனைத்தின் மூலமாகவும் தமிழைக் கற்றுக்கொள்ளலாம் ஆகியவற்றை உணர்த்தவே மாணவர்களை இத்தகைய இடங்களுக்கு அழைத்துச் சென்றதாக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்திருந்த ‘தி திங்கர்ஸ் லர்னிங் சென்ட்டர்’ கல்வி பயிற்சி நிலையத்தின் தலைவர் திரு பாலகுமரன் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

“புலன்கள் வழியாக நாம் கற்றுக்கொள்பவை ஆழமாகப் பதியும் என்பதை அறிவியல் ஆய்வுகள் காட்டுகின்றன. ஒவ்வொரு நடவடிக்கையின்போது பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்யப்படும் புதிய தமிழ் சொற்கள் அவர்களது மூளை வளர்ச்சிக்கு மிக நல்லது,” என்று அவர் கூறினார்.

சுற்றுலாவுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று இடங்களுமே அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய இடங்களாக இருந்தன என்று சுற்றுலாவின் இணை ஏற்பாட்டாளரான தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைமைச் செயலர் திரு பாலாஜி ஹரிதாஸ், 36, தெரிவித்தார்.

குறிப்பாக, சிங்கப்பூரின் இருநூற்றாண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் தேசிய கலைக்கூடம் சுற்றுலா இடங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

மாணவர்கள் கற்றுக்கொண்டவற்றைக் காட்டும் குறிப்புகள், அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அன்பளிப்புப் பைகளுக்குள் இருப்பதால் பெற்றோர் அந்தக் குறிப்பு களைப் பயன்படுத்தி தங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிக்கலாம் என்றனர் ஏற்பாட்டாளர்கள்.

நிகழ்ச்சியின் இறுதியில் பங்குபெற்ற குழுக்களுக்கு செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு விக்ரம் நாயர் பரிசுகளை அளித்தார்.

அதன் பின் உரையாற்றிய அவர், தாமும் தமிழர்களைச் சந்திக்கும்போது இயன்றவரை தமிழில் உரையாட முயல்வது போல மாணவர்கள் கூடுமானவரையில் தமிழில் உரையாட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

“இத்தகைய சுற்றுலாவின் ஏற்பாட்டிற்கு பங்காளிகள், தொண் டூழியர்கள் ஆகியோரின் பங்களிப்பு மிக முக்கியம். இதுபோன்ற முயற்சிகளால் சிங்கப்பூரில் தமிழ்மொழி தொடர்ந்து வாழும் மொழியாக நிலைக்கிறது,” என்று தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவருமான திரு விக்ரம் தமிழ் முரசிடம் கூறினார்.

அடுத்த ஆண்டுக்கான சுற்று லாவில், பாலர்பள்ளி மாணவர்களும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் சேர்த்துக்கொள்ளப்படலாம் என்று ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!