சிங்கப்பூர் கூட்டமைப்புடன் கூடிய இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநில அமராவதி உடன்பாடு ரத்து செய்யப்பட்டது ஏன் என்பது பற்றி அந்த மாநிலத்தின் தொழில்துறை அமைச்சர் மேகமதி கௌதம் ரெட்டி ஒரு பேட்டியில் விளக்கம் அளித்தார்.
“அரசாங்கத்துக்கு அனுகூலம் இல்லாத வகையில் குறிப்பிட்ட பிரத்தியேக உடன்பாடுகள் இடம்பெற்றன. ஒரு திட்டத்திற்குத் தன்னிச்சையாகத் தாக்கல் செய்யப்பட்ட ஒரு யோசனையை அரசாங்கம் பெற்றது.
“அந்தத் திட்ட யோசனை பற்றி பகிரங்கப்படுத்தப்பட்டு, வேறு ஒரு நிறுவனம் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவது போன்ற ஓர் ஏற்பாடு இடம்பெற்று இருக்கிறது.
“இத்தகைய ஓர் ஏற்பாட்டை இந்திய அரசாங்கம் ஏற்பதில்லை. ஆனால் மாநில அரசு அதை அங்கீகரித்தது. சிங்கப்பூர் அதைப் பெற்றது. ஆனால் அது நியாயமான ஒரு முறை அல்ல.
“போட்டி தடுக்கப்படுவதால் மாநிலத்திற்குப் பண இழப்பு ஏற்படுகிறது,” என்று அந்த அமைச்சர் விளக்கினார். சிங்கப்பூர் நிறுவனங்களைத் தாங்கள் மிகவும் உயர்வாகக் கருதுவதாகவும் மறுபடியும் அந்த நிறுவனங்கள் ஆந்திராவுக்கு வந்தால் அவற்றைத் தாங்கள் வரவேற்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அமராவதி திட்ட கட்டுமானப் பணிகள் நிலைக்குத்திப் போயிருக்கின்றன. சிங்கப்பூரை போல அதி நவீன நகரம் அங்கு உருவாக இருந்தது. அது ஆந்திராவின் தலைநகரமாகவும் திகழவிருந்தது.
ஆனால் ஆந்திராவில் புதிதாக அமைந்த அரசு அத்திட்டத்தை ரத்து செய்துவிட்டது.
அமராவதி திட்டத்தில் முதலீடு செய்ய அரசாங்கத்திடம் பணம் இல்லை என்றும் அந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளர் விரும்பினால் அவருக்கு அதைத் தர தாங்கள் தயார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.