சமய நல்லிணக்கம் பேணும் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

கடந்த ஒன்பது ஆண்டுகளாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் ஓரறை வாடகை வீட்டில் தங்கிவரும் திரு விக்டர் லூவிஸ் டி ஃபோவிற்கு இந்த ஆண்டு கிறிஸ்மஸ் வித்தியாசமாகவும் மனநிறைவுடனும் அமையவிருக்கிறது.

தாருல் இஸ்லா எனப்படும் ஜாமியா மறுவாழ்வு இல்லத்தின் குடியிருப்பாளர்கள் சுமார் ஐவர் கடந்த ஒருவார காலமாக திரு விக்டரின் வீட்டைப் புதுப்பித்து விழாக்காலத்திற்குத் தயார்ப்படுத்தியுள்ளனர்.

மகிழ்வு திட்டம் என்று பொருள்படும் ‘புரோஜெக்ட் ஹேப்பினஸ்’ ஜாமியா மறுவாழ்வு இல்லத்தால் இவ்வாண்டு தொடங்கப்பட்டது.

நோன்புப் பெருநாளை ஒட்டி இஸ்லாமியர் ஒருவரின் வீட்டையும் தீபாவளியை ஒட்டி இந்து சமயத்தைச் சேர்ந்த ஒருவரின் வீட்டையும் மறுவாழ்வு இல்லவாசிகள் முன்பு புதுப்பித்துள்ளனர்.

எதிர்வரும் கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி தற்போது யூரேஷியரான விக்டரின் வீடு புதுப் பொலிவு கண்டுள்ளது.

“என் வீட்டில், மேசையில் வைக்கக்கூடிய சிறிய மின்விசிறி மட்டும் இருக்கும். குளியலறையில் குழாயிலிருந்து நீர் கசியும். நான் வசித்து வந்துள்ள இத்தனை ஆண்டுகளில் ஒருமுறை கூட சுவர்களில் சாயம் பூசியது இல்லை,” என்று கூறினார் 73 வயது விக்டர்.

ஓய்வுகாலத்தில் வீட்டில் மனைவியுடன் வசிக்கும் விக்டர், முன்பு ஈமச்சடங்குச் சேவை நிறுவனத்தில் பணிபுரிந்தவர்.

புதுப்பொலிவு கண்டுள்ள அவரது வீடு தம்மை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளதாகக் கூறினார் அவர்.

“என் வீடு மிகவும் பிரகாசமாக இருக்கிறது. புதிய விளக்குகளும் முக்கியமாக கூரை மின்விசிறியும் நிறைவாக இருக்கிறது. எனக்கு என்ன வேண்டும் என்று கேட்டனர். நுண்ணலை அடுப்பு (மைக்ரோவேவ் அடுப்பு) ஒன்று இருந்தால் நான் உணவைச் சூடு செய்து சாப்பிட முடியும் என்றேன். அதனால் அதையும் வாங்கி தந்தனர்,” என்று ஆனந்தத்தில் திளைத்த விக்டர் கூறினார்.

வீட்டின் புதுப்பிப்புப் பணிகள் முடிவுற்றதை முன்னிட்டு வீட்டை திரு விக்டரிடம் நேற்று ஒப்படைத்தனர்.

நிகழ்வில் செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் உள்துறை, சுகாதார அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்ற செயலாளருமான திரு அம்ரின் அமின் கலந்துகொண்டார்.

“இன, சமய நல்லிணக்கத்தின் பிரதிபலிப்பாகவும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தும் விதத்திலும் இந்தத் திட்டம் அமைந்துள்ளது. இதுவே கிறிஸ்மஸ் உணர்வு. சிங்கப்பூர் உணர்வும் இதுவே. மறுவாழ்வு இல்லவாசிகளுக்கு நம்பிக்கையை வளர்க்கும் விதத்திலும் இது அமைகிறது,” என்றார் திரு அம்ரின்.

ஆதரவாளர்களின் நிதி, பொருள் உதவியுடன் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்திய ஜாமியா மறுவாழ்வு இல்லத்தினர், இத்திட்டம் சிங்கப்பூரின் சமய நல்லிணக்கத்திற்கு நல்ல முன்னுதாரணம் என்றனர்.

“கைவேலை தெரிந்த குடியிருப்பாளர்கள் தங்களாலும் உதவ முடியும் என்ற தன்னம்பிக்கையை இந்தத் திட்டம் ஊட்டுகிறது.

“முன்னாள் குடியிருப்பாளரும் இந்தத் திட்டத்திற்குக் கைகொடுக்க முன்வந்துள்ளதே இந்தத் திட்டத்தின் வெற்றிக்குச் சான்று. அடுத்து வரும் சீனப் புத்தாண்டிற்கும் நாங்கள் இத்திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளோம்,” என்றார் ஜாமியா மறுவாழ்வு இல்லத்தின் தலைவர் டாக்டர் ஈசா ஹசான்.

“சாயம் பூசுவது, வீட்டைச் சுத்தம் செய்வது என நான் அறிந்த சில வேலைகளைக் கொண்டு தொண்டு செய்வதை நான் வரமாகக் கருதுகிறேன். எங்களை இன்னும் இச்சமுதாயம் வேறு கண்ணோட்டத்தில் காண்கிறது என்றே எங்களில் பலர் நம்புகிறோம்.

“அந்தப் பார்வையையோ அதுபோன்ற எங்களின் எண்ணங்களையோ தகர்க்கும் விதமாக இத்திட்டம் எங்களுக்கு ஒரு நல்ல வழியை, நற்பணி செய்யும் வாய்ப்பைத் தந்துள்ளது,” என்று உணர்ச்சிவசப்பட்டார் இரண்டு மாதங்களாக மறுவாழ்வு இல்லவாசியாக இருக்கும் ஆஷிக் (உண்மைப் பெயர் அல்ல).

“நாங்கள் செய்த இச்சிறு வேலையால் திரு விக்டர் அடைந்த ஆனந்தம் மனங்குளிர செய்துள்ளது. இனி வரும் காலங்களிலும் இயன்ற அளவு உதவ முற்படுவேன்,” என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!