மின்னல் வேகத்தில் மேடையிலேயே ஒரு வேடத்தில் இருந்து மற்றொரு வேடத்திற்கு மாறும் திறன் கொண்டவர் கலைஞர் ரிக்கோ சந்திரா, 53.
ஒரு நிமிடத்தில் எம்ஜிஆர், மற்றொரு நேரத்தில் மைக்கல் ஜாக்சன், ஜான் டிரவோல்ட்டா என பல்வேறு வேடங்களில் அடுத்தடுத்துத் தோன்றுவார். ஆனால் அவரது மனத்திரையில் தனித்து நிற்பதோ சான்டா கிளோஸ் எனும் கிறிஸ்மஸ் தாத்தா வேடமே.
“கிறிஸ்மஸ் நேரத்தில் பிள்ளை களுடன் பழகும் வாய்ப்பினை இந்த சான்டா வேடம் தருகிறது. நன் கொடை சார்ந்த நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறுவதும் இந்த கிறிஸ்மஸ் நேரத்தில்தான். அப்போதெல்லாம் சான்டாவாகத் தோன்றும் வாய்ப்புகள் எனக்குக் கிடைக்கும்,” என்று திரு ரிக்கோ தெரிவித்தார்.
ஐந்து வயதில் சான்டா கிளோஸ் வேடமிட்ட ஒருவர் தம்மை மகிழ்வித்ததை நினைவுகூர்ந்த திரு ரிக்கோவின் முகத்தில் மலர்ச்சி தென்பட்டது. முகமலர்ச்சி, நிபந் தனையில்லா அன்பு, பிறருக்குக் கொடுக்கும் கொடைத்தன்மை, உள்ளிட்ட உன்னத பண்புகளை சான்டா பிரதிபலிப்பதாக அவர் கூறுகிறார். மேலும், குறிப்பிட்ட நடிகர்களாக பாவனை செய்யும் வேடங்கள் போல அல்லாமல், சான்டா வேடம் அனைவருக்கும் தெரிந்ததே என்பது அதன் மற்றொரு சிறப்பு என்றும் திரு ரிக்கோ சொன்னார்.

கிறிஸ்மஸ் விழாக்காலத்தின் போது சான்டா கிளோஸ் வேட மிட்டு பிள்ளைகளை மகிழ்விக்கும் பழக்கம் நூற்றாண்டுகளைத் தாண்டிய ஒன்று. இந்தச் சான்டா வேடத்தின் மகத்துவம் அவரது சிவப்பு நிற உடையிலோ வெள்ளை நிறத் தாடியிலோ இருப்பதில்லை. மாறாக, இன, மத பேதங்களைத் தாண்டி சான்டா செலுத்தும் அன்பில்தான் உள்ளது என்று கடந்த ஐந்து ஆண் டுகளாகச் சான்டா வேடமிட்டு வரும் திரு ரிக்கோ கூறினார்.
“சான்டா எனும் பாத்திரத்தை ஏற்றிருப்பவரின் உணர்ச்சிகள் உண்மையாக இருக்கவேண்டும். வேடமாக இருந்தாலும் இதில் முழுமையான ஈடுபாடு மிகவும் முக்கியம்,”
“முதலில் சான்டா வேடத்தில் இருக்கும் என்னை நானே கண் ணாடியில் உற்றுப் பார்ப்பேன். அந்தத் தோற்றம் எனக்கு ரசிக்கும் படியாக இருக்க வேண்டும். இல்லையென்றால் என்னை மீண்டும் மீண்டும் திருத்திக்கொள்வேன்,” என்றார் அவர்.
இந்தக் கதாபாத்திரத்தின் மூலம் அன்பை வெளிப்படுத்தும் திறனும் தமக்கு வளர்ந்ததாகக் கூறுகிறார் திரு ரிக்கோ.ஆண்டுக்குச் சுமார் 50 முறை மேடையேறும் திரு ரிக்கோ, சிங்கப்பூரில் மட்டுமின்றி இந்தோனீசியா, மலேசியா, இந்தியா ஆகிய நாடுகளில் நிகழ்ச்சி நடத்தியுள்ளார். “நடிகர் ராகவா லாரன்சின் சிறார் இல்லத்திலும் நான் வேடமிட்டு நடித்துள்ளேன்,” என்றார் ரிக்கோ.
இந்த ‘சான்டா’வுக்கு ஒப்பனை முதல் ஆடை வடிவமைப்பு வரை செய்துவருபவர் அவரது மனைவி சிவகாமி, 49. சான்டா ஒப்பனை செய்வதற்குக் கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் ஆவதாகவும் சான்டா உடையை அணிவதற்குப் பத்து நிமிடங்கள் தேவைப்படுவதாகவும் திருமதி சிவகாமி கூறினார். “என் கணவர் மேடையில் நொடிப்பொழுதில் வேடங்களை மாற்றுவதால் ஆடை வடிவமைப்பை நானே செய்தாக வேண்டும். சான்டா வேடமிடும் பிறரைப்போல அந்த உடையைக் கடையில் வாங்க முடியாது,” என்றார் அவர்.

பிறருக்கு மகிழ்ச்சியூட்டும் பணியில் உழைக்கும் அவ்விருவர், தங்களது தொழிலைச் சேவையாகக் கருதுவதாகவும் கூறினர்.பள்ளிகள், வர்த்தக நிகழ்ச்சிகள், சமூக மன்ற நிகழ்ச்சிகள், ‘மைண்ட்ஸ்’ போன்ற நன்கொடை அமைப்புகள் ஆகிய இடங்களில் வேடமிட்டுள்ள திரு ரிக்கோ, அவற்றில் பலவற்றுக்கு எந்தக் கட்டணமும் பெற்றதில்லை. குறிப்பாக மைண்ட்ஸ் மனநலம் குன்றியோருக்கான சங்க நிகழ்ச்சிகளில் கடந்த பத்து ஆண்டுகளாக இலவசமாக பங்கேற்று வருகிறார்.
சேவை மனப்பான்மையில் ஈடு படும் கலைஞர், சுய வாழ்க்கையில் ஏற்படும் கவலைகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு மற்றவர்களை மகிழ்விக்கும் பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும் என்றார் திரு ரிக்கோ.
“எனக்காக மக்கள் கொடுக்கும் ஆதரவிலிருந்துதான் நான் உற் சாகம் அடைகிறேன். அத்துடன் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நான் ஏற்று நடிப்பதற்கு முன் அதனை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கான ஆராய்ச்சியை மேற்கொள்வேன். அந்த ஆய்வே எனக்கு மனநிறைவைத் தரு
கிறது,” என்றார் அவர்.
கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் திளைக்கும் பிள்ளைகள், என்றென்றும் அன்பின் வழி செல்ல வேண்டும் என அறிவுறுத்தும் திரு ரிக்கோ சந்திரா, “பெற்றோரிடம் என்றும் அன்புடன் இருங்கள். மற்றவர்களிடம் பரிவு காட்டி, இருப் பதைப் பகிர்ந்துகொள்ளுங்கள். இதுதான் இந்த சான்டா கூற விரும்பும் கிறிஸ்மஸ் செய்தி,” என்றார்.