மின்சார ஸ்கூட்டர்களை நடைபாதைகளில் பயன்படுத்துவ தற்கான தடை நேற்று முதல் தீவிரமாக அமல்படுத்தப்படத் தொடங்கியதால் உணவு விநியோக சேவையில் தனிநபர் நடமாட்ட சாதனங்களை (பிஎம்டி) உபயோகிப்போரை பணி யில் அமர்த்துவதை டெலிவரூ நிறுவனம் நிறுத்தியுள்ளது.
டிசம்பர் 31ஆம் தேதி காலக்கெடுவுக்குள் வாகனங்களை மாற்றாத அல்லது நிலப் போக்குவரத்து ஆணையத்தின் மின்ஸ்கூட்டருக்குப் பதிலாக வேறு வாகனத்திற்கு மாறுவதற்கான மானியத்திற்கு விண்ணப்பிக்காத பிஎம்டி ஓட்டுநர்கள், தங்களது வாகனங்களை மாற்ற விரும்புகிறார் கள் என்பதை உறுதிப்படுத்தும் வரை டெலிவரூ நிறுவனத்தில் பணியாற்ற முடியாது என்று டெலிவரூ நிறுவன செய்தித் தொடர்பாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தார்.
இதற்கிடையே, விதிகளை மீறிய இரு மின்ஸ்கூட்டர் ஓட்டுநர்கள் பிடிபட்டதாக நிலப் போக்குவரத்து ஆணயம் நேற்று தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு $2,000 வரை அபராதம், மூன்று மாதம் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
விதியை மீறும் மின்ஸ்கூட்டர் ஓட்டுநர்களுக்கு எதிராக கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் அதே வேளையில், உந்து நடமாட்டச் சாதனங்கள் உரிய பாதுகாப்பு தரங்களுடன் இருக்கின்றனவா என்பதையும் அதிகாரிகள் சோதிப்பர்.