சமூக ஊடகச் செயலியான டெலிகிராம் பயன்படுத்தி பொங்கோல் பூங்காவைப் பயன்படுத்துபவர்கள் மீது தாக்குல் நடத்த தனிநபர் நடமாட்ட சாதன (பிஎம்டி) ஓட்டுநர்களைத் தூண்டிய குற்றத்திற்காக 34 வயது ஆடவர் ஒருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
டெலிகிராம் பயனாளர் ஒருவர், சென்ற திங்கட்கிழமை டெலிகிராம் உரையாடல் குழுக்களில் தனிநபர் நடமாட்ட சாதன ஓட்டுநர்களை அன்றிரவு 9 மணிக்கு பொங்கோல் பூங்காவில் கூடி, “அவர்கள் பார்க்கும் எவருக்கும் காயம் ஏற்படுத்துமாறு” தூண்டினார் என்று புகார் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர்.
அங் மோ கியோ போலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரி கள் சந்தேகத்திற்கு உரியவரை அடையாளம் கண்டு செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கைது செய்தனர்.
சந்தேகத்திற்கு உரியவரிடமிருந்து இரு கைபேசிகள் கைப்பற்றப்பட்டன. அந்த ஆடவர் எதற்காக பிஎம்டி ஓட்டுநர்களிடம் வன்முறையைத் தூண்டினார் என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை.
வன்முறையைத் தூண்டும் மின்னியல் பதிவை செய்தது நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் வரை சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.