சிங்கப்பூரர்களுக்கு முன்னுரிமை அளிப்பது உறுதிசெய்யப்படும்

நிறுவனங்கள் சிங்கப்பூரர்களை விட்டுவிட்டு, வெளிநாட்டவர்களை வேலைக்கு எடுத்து பாரபட்சமாக நடந்துகொள்ளாமல் தடுப்பதை உறுதிசெய்யும் அரசாங்க விதிமுறைகள் இவ்வாண்டு மறுஆய்வு செய்யப்படவுள்ளன.

‘நியாய பரிசீலனைச் சட்டமைப்பு’ என்ற அந்த விதித்தொகுப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்களை மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ, ஃபேஸ்புக் பதிவு ஒன்றின்மூலம் நேற்று அறிவித்தார்.

“ஆள்சேர்ப்பின்போது சிங்கப்பூரர்கள் பாரபட்சமாக நடத்தப்படாமல் தடுக்கும் வலுவான நடவடிக்கையை எதிர்பார்க்கலாம். அதே நேரத்தில், நம் மக்களுக்கு நியாயமான வாய்ப்பை வழங்குவதில் கடப்பாடு கொண்டிருக்கும் நிறுவனங்கள் வலுவான ஆதரவை எதிர்பார்க்கலாம்,” என்று அமைச்சர் ஜோசஃபின் டியோ அப்பதிவில் தெரிவித்துள்ளார்.

மறுஆய்வு குறித்த விவரம் இன்னும் இரு வாரங்களில் வெளியிடப்படும் என்று மனிதவள அமைச்சின் பேச்சாளர் சொன்னதாக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தி கூறியது.

கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து வேலையிட மரணங்கள் தொடர்ந்து குறைந்து வருவதையும் அது சென்ற ஈராண்டுகளாக 100,000 பேருக்கு 1.2 பேர் என்ற விகிதத்தில் இருந்து வருவதையும் அமைச்சர் தமது பதிவில் சுட்டினார்.

உள்ளூர் ஊழியர்களின் நல்வாழ்வில் அரசாங்கம் அதிக அக்கறை செலுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர், “வாழ்க்கையில் மேம்பாடு காண குறைந்த வருமான ஊழியர்கள் உட்பட அனைவருக்குமே நியாயமான வாய்ப்புகள் கிடைக்கவேண்டும். உலகம் முழுவதும் பொருளியல் மந்தநிலை நிலவும் இந்தச் சூழலில், திறன்மேம்பாட்டிற்கும் வேலையில் தொடரவும் எல்லாருக்கும் நியாயமான வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும். ஒருவேளை ஆட்குறைப்பு செய்யப்பட்டால், பாதிக்கப்படுவோருக்கு உரிய தொகை வழங்கப்பட வேண்டும்,” என்றார் அமைச்சர்.

இவ்வாண்டிற்கான வரவுசெலவுத் திட்ட அறிக்கைக்கும் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதங்களுக்கும் தமது அமைச்சு தயாராகி வருவதாக அவர் சொன்னார்.

“புத்தாண்டைத் தொடங்கும் இவ்வேளையில், வேலையிடங்களில் நியாயத்தன்மையை வலுப்படுத்துவதற்கு நானும் மனிதவள அமைச்சின் சக ஊழியர்களும் மீண்டும் எங்களை அர்ப்பணித்துக்கொள்கிறோம்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நல்ல ஊதியம் கிடைக்கும் வேலைகளை வெளிநாட்டவர்கள் எடுத்துக்கொள்வதாக சிங்கப்பூரர்கள் மத்தியில் அதிருப்திக் குரல் எழும்பியதை அடுத்து, வெளிநாட்டு ஊழியர்களின் வரத்து குறைக்கப்பட்டு, கடந்த 2014 ஆகஸ்ட்டில் ‘நியாய பரிசீலனைச் சட்டமைப்பு’ ஏற்படுத்தப்பட்டது.

அவ்விதிகளின்கீழ், 25 ஊழியர்களுக்கும் மேற்பட்டோரைக் கொண்டுள்ள நிறுவனங்கள் மாத ஊதியம் $12,000க்கும் குறைவான நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் வேலைக்கு விளம்பரம் செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது.

குறைந்தது 14 நாட்களுக்கு அந்த விளம்பரங்கள் இருக்கவேண்டும். அதன்பின்னரே, நிறுவனங்கள் வெளிநாட்டவர் ஒருவருக்காக ‘எம்ப்ளாய்ன்மென்ட் பாஸ்’ கேட்டு விண்ணப்பிக்க முடியும்.

அந்தச் சட்டமைப்பு கடைசியாக 2018 ஜூலையில் மேம்படுத்தப்பட்டது.

வெளிநாட்டவர்களை வேலைக்கு எடுப்பதில் சாதகமாக நடந்துகொள்வதாகக் கண்டுபிடிக்கப்படும் நிறுவனங்கள் மனிதவள அமைச்சின் கண்காணிப்பு வளையத்திற்குள் வரும். அத்தகைய நிறுவனங்களின் ‘எம்ப்ளாய்ன்மென்ட் பாஸ்’ விண்ணப்பங்கள் அணுக்கமான பரிசீலனைக்கு உட்படுத்தப்படும்.

கடந்த 2016ஆம் ஆண்டில் இருந்து, கிட்டத்தட்ட 600 நிறுவனங்கள் அமைச்சின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. மொத்தம் 2,300 ‘எம்ப்ளாய்ன்மென்ட் பாஸ்’ விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன அல்லது கிடப்பில் போடப்பட்டன அல்லது நிறுவனங்கள் திரும்பப் பெற்றுக்கொண்டன.

ஆள்சேர்ப்பு நடைமுறைகளில் முன்னேற்றம் காணப்பட்டதை அடுத்து கிட்டத்தட்ட 260 நிறுவனங்கள் அமைச்சின் கண்காணிப்பு வளையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!