சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட புதிய திரைப்படம் 'பிளான் பண்ணி பண்ணனும்'

சிங்கப்பூரில் ‘ஸாக் சலாம்’ இந்திய கண்காட்சியில் புதிய தமிழ்த் திரைப்படத்தின் தலைப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.

‘பிளான் பண்ணி பண்ணனும்’ என்பது திரைப்படத்தின் தலைப்பு.

கார் பயணத்தில் வித்தியாசமான நபர்களிடையே இடம்பெறும் சந்திப்பின் மூலம் அவரவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் திருப்புமுனைகளை முழு நகைச்சுவை பாணியில் ‘பிளான் பண்ணி பண்ணனும்’ மக்களிடம் கொண்டு செல்லவுள்ளது. 

பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் இத்திரைப்படம் ஏறத்தாழ 18 கலைஞர்களின் குழு முயற்சியில் உருவாகியுள்ளது.

இத்திரைப்படத்தின் கதாநாயகியாக ரம்யா நம்பீசனும் கதாநாயகனாக ரியோ ராஜும் நடித்துள்ளனர்.

சேதுபதி, அக்னி தேவி போன்ற பல தமிழ் திரைப்படங்களில் தமது நடிப்புத் திறனால் மக்களை கவர்ந்த ரம்யா இத்திரைப்படத்தில் ‘ஆம்பல்’ எனும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.

அமெரிக்காவுக்குச் சென்று தமது குறிக்கோள்களை அடையவேண்டும் என்ற சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் நவீன பெண்மணியான ஆம்பல் எவ்வாறு ஒரு கார் பயணத்தில் ஏற்படும் சவால்களைச் சந்திக்கிறார் என்பதை உணர்ச்சிபூர்வமாக நடிகை ரம்யா நடித்துள்ளார்.

விஜய் டிவி’யின் சரவணன் மீனாட்சி தொடரில் சரவணனாக நடித்து புகழ்பெற்ற சின்னத்திரை நடிகரும் சன் மியூசிக் தொலைக்காட்சியின் தொகுப்பாளராக ஜொலிக்கும் ரியோ ராஜ் தற்போது வெள்ளித்திரையிலும் கலக்கி வருகிறார்.

அதே துடிப்புடன் இத்திரைப்படத்தில் வட சென்னையைச் சேர்ந்த ஆளாக நடித்துள்ள ரியோ ராஜ்  தாம் பணிபுரியும் தகவல் தொழில்நுட்ப நிறுவன (IT company) சூழலுக்கு ஏற்ப எவ்வாறு தம்மை மாற்றிக் கொள்கிறார் என்பதையும் தமது நண்பர் ஒருவரால் பின் எப்படி இந்த கார் பயணத்தில் இடம்பெறுகிறார் என்பதையும் நகைச்சுவையாக திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது.

“பல பிரபல நடிகர்களுடன் நடித்துள்ள ரம்யாவுடன் எப்படி பழகி இந்தப் படத்தில் நடித்து முடிக்க போகிறேன் என்ற கவலை ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் அனைத்தையும் உடைக்கும் வகையில் எல்லோரிடமும் அவர் இயல்பாக பேசியதால் அவருடன் எளிதில் பழகி ஒரு புரிந்துணர்வுடன் இணைந்து நடிக்க முடிந்தது,’’ என்றார் ரியோ ராஜ்.

“எல்லா சூழலிலும் நடிப்புத் திறனை படத்தின் கதைக்கு எற்ப வெளிக்கொணர்ந்து அதிக ஈடுபாடு காட்டுவார்,’’ என்று ரம்யா, 34, தம்முடன் நடித்த கதாநாயகனைப் பற்றி தமிழ் முரசுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

சுமார் ஐந்து பாடல்களுடன் யுவன் சங்கர் ராஜாவின் இசையமைப்பில் வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தின் தலைப்பு (movie title launch) வெளியீட்டு விழா ‘ஸாக் சலாம்’ இந்திய கண்காட்சியில்  ஜனவரி 11ஆம் தேதி நடைபெற்றது.