இரண்டு உள்ளங்கள் இணையும் நாளில் எல்லாமே இரண்டு

பிப்ரவரியில் உள்ள இரண்டு தேதிகள் இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்க பொருத்தமான நாட்களாக பலரும் தேர்வு செய்துள்ளனர். 02.02.2020 மற்றும் 22.02.2020 ஆகிய தேதிகள் அவை.  மணமுடிக்க பிப்ரவரி 2ஆம் தேதிக்கு 178 ஜோடிகளும் பிப்ரவரி 22ஆம் தேதிக்கு 331 ஜோடிகளும் பதிவு செய்திருப்பதாக சிங்கப்பூர் திருமணப் பதிவகம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறியது. இது இம்மாதம் 6ஆம் தேதி வரையிலான நிலவரம். அதற்குப் பின்னர் இந்த எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம்.

கடந்த ஆண்டில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 50 முதல் 60 திருமணங்களே பதிவு செய்யப்பட்டன.

இரண்டு எனப்படும் தேதி சீன மொழியில் நல்லிணைப்பு என்பதன் பொருளாகும். அத்துடன், பிப்ரவரி 2ஆம் தேதி சீனப் புத்தாண்டில் ஒன்பதாவது நாள் வருகிறது. ஒன்பது என்பது சீன உச்சரிப்பில் ‘நீண்ட’ என்னும் பொருளைத் தரும். நெடுநாள் வாழ்க்கைக்கு அடியெடுத்து வைக்க இந்தத் தேதியைத் தேர்ந்தெடுக்க இதுவும் ஒரு காரணம் என சிலர் கூறுகின்றனர். திருமண ஜோடிகளிடையே பிரபலமடைந்து வரும் இந்த இரு தேதிகளில் வாழ்க்கையைத் தொடங்க இருக்கும் இரு இந்திய ஜோடிகள் இந்த தேதிகளைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை தமிழ் முரசிடம் விளக்கினர்.

கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி ஹபிடா ஷாவை திருமணத்தில் முதல்முறையாகக் கண்டார் ஹுசேன். பிறகு அவர்கள் இருவரும் முதன்முதலாகச் சந்தித்தது நவம்பர் 22ஆம் தேதி. சென்ற ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் தேதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. தேதி பொருத்தத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் வகையில் பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளது இந்த இணை. 

22ஆம் தேதி 2ஆம் மாதம் 2020ஆம் ஆண்டு என அனைத்திலும் இரண்டு வருவது சிறப்பான ஒன்று என்று கூறினார் ஹபிடா. 

பிப்ரவரி 2ஆம் தேதி மணமுடிக்கிறார் தமிழ் முரசின் செய்தியாளர் இர்ஷாத் முஹம்மது. 

“02-02-2020 என்ற தேதி அரிதான ஒரு நிகழ்வு. திருப்பி வாசித்தாலும் ஒரே தேதியைத்தான் அது குறிக்கும். எத்தன காலம் ஆனாலும் நினைவில் பதிந்திருக்கக்கூடிய தேதி இது,” என்று கூறினார் இர்ஷாத். 

“நானும் என் வீட்டின் இரண்டாவது பிள்ளை. என் வருங்கால துணைவியாரும் வீட்டின் இரண்டாவது பிள்ளை. அந்தப் பொருத்தமும் இருப்பதால் இந்தத் தேதியில் திருமணம் செய்ய எங்கள் இருவீட்டிலும் விருப்பப்பட்டனர்,” என்று கூறிய அவர், அனைவரும் விரும்பிய தேதியாக இருப்பதால் மண்டபம், புகைப்படக்காரர்கள், ஒப்பனையாளர்கள் என பல ஏற்பாடுகளுக்குச் சிரமம் ஏற்பட்டது என்றார் அவர்.