லிட்டில் இந்தியாவில் ‘பொங்கலோ பொங்கல்’

லிட்டில் இந்தியாவில் கிட்டத்தட்ட ஒரு வாரமாகப் பொங்கல் கொண்டாட்டம் களைகட்டியது. லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமை சங்கம் இந்தக் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.
கம்பத்து பொங்கல் எனும் கருப்பொருளுடன் இவ்வாண்டில் பொங்கல் கொண்டாட்டம் நடத்தப்படுகிறது.
கருப்பொருளுக்கு ஏற்ப பங்காளிகள் பலருடன் இணைந்து கம்பத்து உணர்வுடன் லிஷா கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருப்பதாக பொங்கல் ஒளியூட்டு விழாவின்போது பிரதமர் அலுவலக அமைச்சரும் கல்வி, நிதி இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா கூறினார். 
லிட்டில் இந்தியாவில் நடைபெறும் கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வாக நேற்று ‘கூட்டுப் பொங்கல்’ கிளைவ் ஸ்திரீட்டில் நடைபெற்றது. 
தைப் பொங்கல் அன்று சூரிய பொங்கல் கொண்டாட்டங்களுக்கும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று பால் தரும் பசுமாடுகள், உழவுத் தொழிலில் விவசாயிகளுக்குப் பேருதவியாக இருக்கும் காளை மாடுகளுக்கும் நன்றி நல்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.  
கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படும் இவ்வாண்டின் லிட்டில் இந்தியா பொங்கல் திருவிழாவில் பல இனத்தவர்களையும் வெவ்வேறு கலாசாரப் பின்னணிகளைச் சேர்ந்தவர்களையும் ஈடுபடுத்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக லிஷாவின் தலைவர் திரு ராஜ்குமார் சந்திரா தெரிவித்தார். 

கூட்டுப் பொங்கல் 
கிட்டத்தட்ட 300 பேர் கலந்துகொண்ட நேற்றைய நிகழ்வில் சிங்கப்பூரர்கள் உட்பட அமெரிக்கா, தென்கொரியா, பிரேசில், இந்தோனீசியா, பனாமா, நெதர்லாந்து, கிரேக்கம், ஆஸ்திரேலியா, ஜெர்மனி என ஒன்பது நாடுகளைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர். 
ஏறத்தாழ 50 சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் குழுக்களாகப் பிரிந்து, காலை 10.30 மணியிலிருந்து பொங்கல் தயாரிப்பு
களைத் தொடங்கினர். சிறப்பு விருந்தினராக தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மெல்வின் யோங் கலந்துகொண்டார். 
“சிங்கப்பூரின் பல இன கலாசாரத்தைப் பார்க்க மனதிற்கு மகிழ்ச்சி தருகிறது. இது போன்ற பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வது எனக்கு இதுவே முதல்முறை. பொங்கல் பொங்கும்போது அனைவரும் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்,” என்றார் கிரேக்கத்தைச் சேர்ந்த சுற்றுப்பயணியான இவிஜி காலியோ, 41.
ஏறத்தாழ 50 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்துவரும் ஐந்து பேருடன் சேர்ந்து பொங்கலைக் கொண்டாடும் புதிய அனுபவம் கிடைத்ததாக 57 வயது திருமதி ஜமுனாராணி மனுநீதி கூறினார். 
“தொடக்கப்பள்ளியிலிருந்து நண்பர்களாக இருக்கும் நாங்கள்  இந்தக் கூட்டுப் பொங்கலில் 
கலந்துகொண்டோம். வீட்டில் பொங்கல் கொண்டாடுவதற்கும் இங்கு நண்பர்களோடு சேர்ந்து கொண்டாடுவதற்கும் வேறுபாடு உள்ளது. நண்பர்களோடும் சமூகத்தோடும் சேர்ந்து கொண்டாடுவது மனதிற்கு நிறைவு தருகிறது,” என்றார் திருமதி ஜமுனாராணி. 

மாட்டுப் பொங்கல்
கடந்த வியாழக்கிழமையன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது. பொங்கல் கொண்டாட்டத்துக்காக லிட்டில் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்ட மாடுகள் மாட்டுப் பொங்கல் தினத்தன்று குளிப்பாட்டப்பட்டும் மாலைகள் அணிவிக்கப்பட்டும் சிறப்பான முறையில் கவனித்துக்கொள்ளப்பட்டன.
பசுமாட்டிலிருந்து கறந்த பாலைக் கொண்டு கற்கண்டு, சக்கரையுடன் சர்க்கரைப் பொங்கல் தயாரிக்கப்பட்டது. இதைக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
சுற்றுப்பயணிகள், பள்ளி மாணவர்கள் ஆகியோருக்குச் சிறப்பு சுற்றுலாக்களும் நடத்தப்பட்டன. 

தைப் பொங்கல்
கடந்த புதன்கிழமை கொண்டாடப்பட்ட தைப் பொங்கல் அன்று சூரிய பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. ஸ்ரீ நாராயண மிஷன், ஜாமியா ஆகிய இல்லங்களைச் சேர்ந்த மூத்தோர் உட்பட வேறு சில மூத்தோரையும் சேர்த்து அன்றைய நிகழ்ச்சியில் மொத்தம் 50 பேர் பங்கேற்றனர்.
பானையிலிருந்து பால் பொங்கி வந்தபோது லிஷா, இந்திய மர
புடைமை நிலையம், சிங்கப்பூர் பயணத்துறை  கழகம் ஆகிய அமைப்பு களைச் சேர்ந்த பிரதிநிதிகள், ஆதரவாளர்களுடனும் பங்காளி
களுடனும் சேர்ந்து அனைவரும் ‘பொங்கலோ பொங்கல்’ எனக் கூறி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட ஏறத்தாழ 150 பேருக்கு சர்க்கரைப் பொங்கலுடன் அறுசுவை விருந்தும் பரிமாறப்பட்டது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இணைப் பேராசிரியர் எஸ்.வாசு நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இன, சமயப் பேதங்களைக் கடந்து அனைவரின் ஒற்றுமையே சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கான அடித்தளம் என்று கூறிய இணைப் பேராசிரியர் வாசு, தனிமனித மகிழ்ச்சியும் நாட்டின் நலனுக்கு மிக அவசியம் என்று தெரிவித்தார்.