சுடச் சுடச் செய்திகள்

கடல்கடந்தும் பொங்கலை மறவா நெஞ்சங்கள்

‘தி லியோ’ வெளிநாட்டு ஊழியர்விடுதியில் தைப்பொங்கல் தினத்தன்று கிட்டத்தட்ட 500 இந்திய ஊழியர்கள் ஒன்றுசேர்ந்து பொங்கலைக் கொண்டாடினர். 

மலர்கள், கரும்புகள், வாழை இலைகள், மாவிலைகள் கொண்ட தோரணங்கள் உட்பட பொங்கல் பானைகள், புத்தாடைகள் என்று பொங்கல் திருநாளைப் பிரமாண்டமாக நடத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடு களோடும் லியோ விடுதியில் பொங்கல் குதூகலம் நடைபெற்றது.

இந்த விடுதியில் ஆறாவது முறையாக நடைபெறும் பொங்கல் கொண்டாட்டத்தில் எம்இஎஸ் குழுமத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு எஸ்.எம்.அப்துல் ஜலீல் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மண் பானையில் ஊற்றப்பட்ட பால் பொங்கியதைக் கண்டு அதைச் சுற்றி கூடியிருந்த திரு ஜலீல் உட்பட அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

பிறகு சமைக்கப்பட்ட சர்க்கரைப் பொங்கலை ஊழியர்கள் சிலருக்கு திரு ஜலீல் பரிமாறினார்.  “சிங்கப்பூரில் பணியாற்றும் தமிழ்நாட்டு ஊழியர்கள் பலருக்குப் பொங்கலுக்காக  அவர்களது சொந்த ஊருக்குப் போக வாய்ப்பு கிடைக்காது. 

“குடும்பங்களைப் பிரிந்து இருக்கும் அவர்களுடன் ஒரு குடும்பம் போல இருந்து, பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களை லியோ விடுதி நடத்துகிறது. பொங்கலை கொண்டாடுவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து ஆதரவு வழங்கினோம்,” என்றார்  ‘தி லியோ’ வெளிநாட்டு ஊழியர் விடுதியின் நிர்வாகி திரு எஸ்.கே.பாவா சாகிப்.  ‘தி லியோ’ விடுதியில் தங்கும் 30 வெளிநாட்டு ஊழியர்களை உள்ளடக்கிய ஏற்பாட்டுக் குழு ஒன்று, ஏறத்தாழ 10 நாட்களாக இந்தப் பொங்கல் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. 

இக்குழுவிற்குத் தேவையான பயண வசதிகள், நிதி, மனிதவளம் ஆகியவற்றை வழங்கி ‘தி லியோ’ விடுதி ஆதரவளித்துள்ளது என்று குறிப்பிட்டார் திரு பாவா. 

“கிராமத்து மண்வாசனை எனும் கருப்பொருளுடன் பொங்கல் திருநாளை இவ்வாண்டு கொண்டாடினோம். “இந்தியாவில் கிடைக்கும் அனுபவம் போலவே சிங்கப்பூரிலும் அமைய முயற்சி செய்தோம்,” என்றார் திரு பாவா.  “பொங்கல் பண்டிகை தமிழர்களுக்கு மிகவும் முக்கியமானது.சூரியனுக்கும் இயற்கைக்கும் விவசாயத்துக்கும் நன்றிகூறும் ஒரு விழா இது. 

“இயற்கையின் கருணையில் நாம் வாழ்கிறோம். அந்த இயற்கையை மறக்காமல் இருக்க பழங்காலத்து தமிழர்கள் மண் பானையில் பொங்கல் செய்தார்கள். “அந்தப் பாரம்பரியத்தை சிங்கப்பூரிலும் தொடர்கிறோம்,” என்றார் ஏற்பாட்டுக் குழு உறுப்பினரும் இந்திய ஊழியருமான திரு மு.குமரேசன், 31.  

‘தி லியோ’ விடுதியின் கொண்டாட்டத்தினால் வீட்டில் குடும்பத்துடன் பொங்கலைக் கொண்டாட முடியாத ஏக்கம் குறைகிறது என்றும் இந்தியாவில் கொண்டாடும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு சமமாக ‘தி லியோ’ விடுதியின் கொண்டாட்டங்கள் அமைந்தன என்றும் குறிப்பிட்டார் ஏற்பாட்டுக் குழு உறுப்பினரும் இந்திய ஊழியருமான திரு க.பத்மநாபன், 40. 

 

செய்தி: எஸ்.வெங்கடேஷ்வரன்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon