சிங்கப்பூரில் வூஹான் கிருமி தொற்றிய முதல் சம்பவம்

சிங்கப்பூரில்  வூஹானின் கொரோனா கிருமி தொற்றியதாக உறுதி செய்யப்பட்ட 66 வயது ஆடவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

 சீனாவின் வூஹான் நகரைச் சேர்ந்த அவர், குவாங்ஸு நகரில் இருந்து ஒன்பது பேருடன் கடந்த திங்கட்கிழமை இரவு 10.40 மணிக்கு சிங்கப்பூர் வந்திறங்கியதாக சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

மறுநாள்  அந்த ஆடவருக்குக் காய்ச்சலும் இருமலும் ஏற்பட்டன. நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் அவசரப் பிரிவை நாடிய அவர் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டார். 

அவருக்கு  ஏற்பட்டிருப்பது நிமோனியா காய்ச்சல் என்று கண்டறியப்பட்டதோடு கொரோனோ கிருமி தொற்றியிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. 

அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் பயனாக அந்த முதியவருக்கு கொரோனா கிருமி தொற்றியது நேற்று மாலை 6 மணிக்கு உறுதி செய்யப்பட்டது. 

இருப்பினும் அவரது உடல்நிலை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது 37 வயது மகனும் சந்தேகத்திற்கு இடமான வகையில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளார்.

சீனாவின் வூஹான் நகரைச் சேர்ந்த 53 வயதுப் பெண்மணி ஒருவருக்கும் கொரோனா கிருமி தொற்றி இருக்கும் சந்தேகம் வலுப்பெற்றுள்ளது. 

இருப்பினும் அதனை உறுதிப்படுத்தக்கூடிய இரண்டாவதுகட்ட பரிசோதனை முடிவு இன்று காலை தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நேற்று அதிகாலை 3 மணியளவில் அவரது உடல்நிலையில் சந்தேகம் ஏற்பட்டதை சுகாதார அமைச்சு அறிந்தது.

சிங்கப்பூரில் இதுவரை 28 பேர் அவ்வகை கிருமி தொற்றிய சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களிடம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது நேற்று மாலை 6 மணி வரையிலான நிலவரம். 

சந்தேகத்துக்கு இடமானவர்களின் வயது 1 முதல் 78 வரை. இவர்கள் அனைவரும் இரண்டு வார மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படுவர்.

சாங்கி விமான நிலையத்திலிருந்து கார் மூலம் ஷாங்ரி-லாவின் ரசா செந்தோசா உல்லாசக் கூடத்துக்குச் சென்ற அவர், அங்கு தங்கியதாகவும் அந்த கூடத்தைச் சுற்றியே அவரது நடமாட்டம் இருந்ததாகவும் தெரிய வந்தது. 

அவசர சிகிச்சைக்காக சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அவர் டாக்சியில் சென்றதும் தெரிய வந்துள்ளது. 

இந்த விவரங்கள் நேற்று இரவு செய்தியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டன. சுகாதார அமைச்சர் கான் கிம் யோங்கும் தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங்கும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

சிங்கப்பூரில் உள்ள எவருக்கும் கிருமித் தொற்று ஏற்படவில்லை என்று தெரிவித்த சுகாதார அமைச்சு, இங்குள்ளவர்கள் பீதியடையத் தேவை இல்லை என்றும் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டது.

சிங்கப்பூரில் புதிய வகை கிருமி பரவிவிடாமல் இருக்க எல்லாவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இயக்குநர் இணைப் பேராசிரியர் வெர்னன் லீ கூறினார்.

கிருமிப் பரவலைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் பணிக்குழு ஒன்றை நேற்று முன்தினம் சுகாதார அமைச்சு ஏற்படுத்தியது.