அறிவியல் துறையில் அதிகமான பெண்கள் முன்வந்து முத்திரை பதிக்கவேண்டும் என்ற விருப்பத்தில் பெண் விஞ்ஞானிகளின் தேவைகளை நிறைவுசெய்யும் பல்வேறு திட்டங்களில் முனைப்புடன் ஈடுபடுகிறார் உயிரியல் விஞ்ஞானி டாக்டர் லக்ஷ்மி ராமச்சந்திரன். பெண்களுக்குரிய சில சவால்களால் விஞ்ஞானத்துறையில் வாய்ப்புகளை இழப்பதாகக் கூறிய அவர், இதனை மாற்றுவதற்கான பல்வேறு முயற்சிகளில் சிங்கப்பூரிலே ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார்.
டியூக் என்யூஎஸ் பல்கலைக்கழகத்தின் திட்டங்களின் ஆய்வுத் திட்ட நிர்வாகியாகப் பணிபுரியும் 41 வயது டாக்டர் லக்ஷ்மி, கடந்த ஏழு ஆண்டுகளாக சிங்கப்பூரில் தமது கணவருடனும் இரண்டு மகன்களுடனும் வசிக்கிறார். இந்தியாவின் கேரள மாநிலத்தில் பிறந்த அவர், அங்கு ஐந்தாம் வகுப்பு வரையில் படித்து பிறகு ஐக்கிய அரபு சிற்றரசில் பயின்றார். பின்னர் 1999ஆம் ஆண்டில் மங்களூரில் இளநிலை நுண்ணறிவியல் பட்டம் பயின்று 2001ல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மரபணுத் தொழில்நுட்ப முதுநிலைக் கல்வியைக் கற்றார். பின்னர் 2006ல் நியூ யார்க் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் அவர் உயிரணு உயிரியயல் தொழில்நுட்பத்தில் பிஎச்டி பெற்றார்.
விஞ்ஞானியாகவேண்டும் என்ற வேட்கை 15 வயதில் தமக்கு ஏற்பட்டதாக டாக்டர் லக்ஷ்மி தெரிவித்தார். " உயிரியல் மீது ஆர்வமாக இருந்த என்னை மருத்துவராகும்படி பலர் பரிந்துரைத்தனர். ஆனால் அப்போது எனக்கு அதில் ஆர்வம் ஏற்படவில்லை. பிறகு நான் விஞ்ஞானி ஆகவேண்டும் என ஆசைப்பட்டபோது என்னைச் சுற்றியிருந்த பலர் அதனை விடுத்து மருத்துவராகும்படி கூறினர்," என்றார் அவர்.

ஆயினும் இளம் வயதில் தம் விருப்பத்தைப் பற்றி தெளிவாக இருந்ததால் இறுதியில் தமது விருப்பத்திலிருந்து பின்வாங்கவில்லை என்று அவர் கூறினார். "எனக்குத் தெரிந்த என் பெண் நண்பர்கள் பலர், மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்து தங்களது விருப்பத்திற்கு முற்றிலும் மாறுபட்ட வேலைகளைச் செய்து வருகின்றனர். ஆயினும், அவர்களது விருப்பங்கள் இளவயதில் எப்படி இருந்ததோ அவை இன்றும் மாறாமல் இருப்பதை நான் காண்கிறேன்" என்றார்.
விஞ்ஞானிகள் என்றாலே ஐன்ஸ்டைன் போன்ற வயதான ஆண்கள் என்ற கண்ணோட்டம் தமக்கு ஆரம்பத்தில் இருந்ததாகக் கூறிய டாக்டர் லக்ஷ்மி, அறிவாளியாகத் தெரியவேண்டும் என்பதற்காக தமது நடை உடை பாவனையை அமைத்துக்கொண்டு பெண்களுக்குரிய அழகு பராமரிப்பை ஆரம்பத்தில் தவிர்த்ததாகக் கூறினார். போகப் போக தமது பெண்மையைப் பெருமையாக எண்ணி அதனை தமக்குப் பிடித்த ஆடைகள் மற்றும் ஒப்பனை வழி வெளிப்படுத்த முடிவு செய்ததாக அவர் கூறினார்.
பொறியாளராகப் பணிபுரியும் தமது தந்தையும் அலுவலக நிர்வாகியாக வேலைபார்த்த தாயாரும் தமது படிப்புக்குக் குறுக்கே நின்றதில்லை என்று கூறிய டாக்டர் லக்ஷ்மி, தம் கணவரும் மாமனார் மாமியாரும் அதேபோலவே உறுதுணையாக இருந்ததாகக் கூறினார். " இந்த விதத்தில் நான் மிகவும் அதிஷ்டசாலி. பெண்களுக்குரிய பொறுப்புகள் எனக்கு இருந்தபோதும் என் குடும்பத்தினர் அனைவரும் முற்போக்கு சிந்தனை உடையவர்கள்"என்றார் அவர்.
பிஎச்டி படிக்கத் தொடங்கியபோதே தமது 21 வயதில் திருமணம் செய்துகொண்டார்.இருந்தபோதும், கடல்துறை வர்த்தகராகப் பணிபுரியும் தம் கணவரை அடிக்கடி காண முடியாத நிலை ஏற்பட்டது. பல ஆண்டுகளாக உயிரியல் ஆய்வில் ஈடுபட்டிருந்த டாக்டர் லக்ஷ்மி, குடும்ப வாழ்க்கையில் அவ்வளவாக கவனம் செலுத்த முடியாமல் போனதாகத் தெரிவித்தார். "என் கணவரின் வேலையால் அவர் அடிக்கடி பல நாடுகளுக்குச் செல்லவேண்டியிருந்தது. இருவரும் பல நேரங்களில் பிரிந்து இருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது," என்றார். இறுதியில் 28 ஆம் வயதில் தமது வேலையை விட்டு தற்காலிகமாக வீட்டில் இருக்க அவர் முடிவெடுத்தார்.
ஓய்வாக இருந்த அந்நேரத்தில் அவர் 'ருமிஸ் பூடிஸ்' என்ற புத்தகத்தை மேக்னா சவுதரி என்ற தம் நண்பருடன் எழுதினார். அமெரிக்காவில் தாங்கள் இருவரும் பயின்றபோது தங்களுக்குச் சமைத்துக்கொண்ட உணவு பற்றியும் வெளிநாட்டில் அவர்கள் தன்னந்தனியே சமாளித்த அனுபவத்தையும் அந்த புத்தகம் நகைச்சுவைக் கண்ணோட்டத்துடன் விவரிக்கிறது. "மீண்டும் வேலைக்குச் செல்ல நான் சிரமப்பட்ட காலக்கட்டத்தில் எனக்கு சிங்கப்பூரில் வேலை கிடைக்க கைக்கொடுத்தது இந்த புத்தகம்தான்," என்று டாக்டர் லக் ஷ்மி கூறினார்.
வேலையிலிருந்து ஈராண்டுகளாக விலகி 2011ல் பிறந்த தம் மூத்த மகனைப் பராமரிக்க நேரம் எடுத்துக்கொண்டதால் இந்தச் சிரமம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், இதுபோல பல பெண்கள் தமது துறையில் ஓரத்திற்குத் தள்ளப்படுவதாகக் குறிப்பிட்டார். உலகளவில் விஞ்ஞானத்துறையிலுள்ள தலைமைத்துவ பொறுப்புகளில் 28 விழுக்காடு மட்டும் பெண்கள் வகிப்பதாகச் சுட்டிய அவர், இந்நிலையை மாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட முடிவு செய்ததாகக் கூறினார். "2019ஆம் ஆண்டில் நான் ஏ-ஸ்டார் மருத்துவ உயிரியல் ஆய்வு நிலையத்தின் தலைவர் டாக்டர் வந்தனா ராமச்சந்திரன் மற்றும் சில பெண் விஞ்ஞானிகளுடன் இணைந்து அறிவியலில் பெண்களை மேம்படுத்தும் மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்தேன். இதில் என்யுஎஸ், என்டியு உள்ளிட்ட பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பெண்கள் பலர் கலந்துகொண்டனர். விஞ்ஞானத்துறையில் தலைவர்களாக விரும்பும் பெண்களுக்கு கொள்கைரீதியான உதவித்திட்டங்களைப் பற்றி விவாதிப்பதே இதன் நோக்கம்," என்று அவர் தெரிவித்தார்.
விஞ்ஞானத்திற்கான அனைத்துலக மகளிர் தினமான இன்று சிறுமிகளுக்காக இன்று சிங்கப்பூர் அறிவியல் நிலையத்தில் உரையாற்றிய அவர், அறிவியலில் இன்னும் அதிகமான பெண்கள் முன்னுக்கு வரவேண்டும் என ஆசைப்படுவதாகக் கூறினார். "அறிவியல் துறையில் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. ஆனால் தனிப்பட்ட சில சவால்கள் பெண்களுக்கு இருப்பதால் எச்சூழலுக்கும் மாற வேண்டிய தன்மை அவர்களுக்கு இருக்கவேண்டும். அப்படி மாறப் பழகிக்கொண்டால் பெண்களால் சாதிக்க முடியாதது ஒன்றுமில்லை," என்று அவர் கூறினார்.