அதிகரித்து வரும் டெங்கி தொற்று

சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்டோர் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாண்டில் இதுவரை டெங்கி காரணமாக குறைந்தது எழுவர் உயிரிழந்துவிட்டனர். மாண்டவர்கள் 60 முதல் 80 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர்கள் டெங்கி தொற்றுக் குழுமங்களில் வசித்து அல்லது பணியாற்றி வந்தனர் என்றும் தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்து இருக்கிறது.

கடந்த வாரத்தில் 508 பேரை டெங்கி தொற்றியது. அதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 390ஆக இருந்தது.

இது, வாரத்திற்கு 157 என்ற ஐந்தாண்டு இடைநிலை எண்ணிக்கையைப் போல மூன்று மடங்கிற்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டில் இதுவரை 7,400க்கும் மேற்பட்டவர்களை டெங்கி தொற்றிவிட்டது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இதில் பாதியளவுகூட டெங்கி பாதிப்பு பதிவாகவில்லை. 2019ஆம் ஆண்டில் 52 முதல் 78 வயதுக்குட்பட்ட 20 பேர் டெங்கிக் காய்ச்சலால் மரணமடைந்தனர்.

இந்நிலையில், டெங்கித் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகளவிலேயே இருக்கலாம் என்றும் வரும் மாதங்களில் அது மேலும் உயரலாம் என்றும் சுற்றுப்புற வாரியம் எதிர்பார்க்கிறது.

“சிங்கப்பூரில் மே முதல் செப்டம்பர் வரையிலான வெப்பமான காலகட்டத்தில் டெங்கிப் பரவல் வழக்கமாக அதிகமாகவே இருக்கும். ஏடிஸ் கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகமாக இருப்பதும் டெங்கி கிருமியின் நோயரும்பும் காலம் குறைவாக இருப்பதுமே இதற்குக் காரணம்,” என்று வாரியம் தனது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது.

கொவிட்-19 கிருமித்தொற்று முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருப்பதால் பலரும் வீட்டிலிருந்தபடி வேலை செய்கின்றனர். இதனால் அவர்கள், குறிப்பாக டெங்கி குழுமங்களில் அல்லது கொசுக்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் வசிப்போர், டெங்கி கிருமியைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்கடிக்கு ஆளாகும் சாத்தியத்தை அதிகப்படுத்திக்கொள்கின்றனர் என வாரியம் குறிப்பிட்டது.

இப்போதைக்கு 123 டெங்கி குழுமங்கள் இருக்கின்றன. அதில் மூன்று இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் டெங்கியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புக்கிட் பாத்தோக் சாலையில் உள்ள டெங்கி குழுமத்தில் 153 பேரை டெங்கி தொற்றியிருக்கிறது. உட்லே குழுமத்தில் 134 பேரும் ஜாலான் பகாரில் உள்ள வெஸ்ட்வுட் பகுதியில் 105 பேரும் டெங்கி தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

முன்னதாக இந்த மாதத்தில் சுவா சூ காங், புக்கிட் பாத்தோக் வட்டாரங்களில் ‘வுல்பாக்கியா’ பாக்டீரியங்களைச் சுமந்துசெல்லும் ஆண் கொசுக்கள் விடப்பட்டன. இந்த பாக்டீரியங்கள், பெண் கொசுக்களை மலடாக்கும் திறன் கொண்டவை.

சுவா சூ காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் கல்வி, மனிதவள மூத்த நாடாளுமன்றச் செயலாளருமான திருவாட்டி லோ யென் லிங்கும் அண்மையில் டெங்கியால் பாதிக்கப்பட்டார்.

‘வுல்பாக்கியா’ பாக்டீரியங்களுடன் கூடிய ஆண் கொசுக்கள் தெம்பனிசிலும் ஈசூனிலும் ஏற்கெனவே விடப்பட்டன. இதன் காரணமாக அங்கு ஏடிஸ் கொசுக்களின் எண்ணிக்கை 90% குறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

அனைத்து வர்த்தகங்களும் கட்டட உரிமையாளர்களும் கொசு பெருகாமல் கட்டுப்படுத்த போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வாரியம் எச்சரித்து இருக்கிறது.

கட்டுமானத் தளங்கள், அலுவலகங்கள் மற்றும் வர்த்தகக் கட்டடங்கள், கடைகள், கேளிக்கை நிலையங்கள், பண்ணைகள், செடி வளர்ப்புப் பண்ணைகள், பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.

இவ்வாண்டின் முதல் காலாண்டில் 4,600 கொசு இனப்பெருக்க இடங்களைச் சுற்றுப்புற வாரிய அதிகாரிகள் கண்டறிந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!