570 பேருக்கு புதிதாகத் தொற்று; கிருமி பரவல் கட்டுப்பட்டுள்ளது

சிங்கப்பூரில் புதிதாக 570 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டோரில் இருவர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்.  ஏனையோர் ஊழியர் தங்கும் விடுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 இன்றைய எண்ணிக்கையுடன் சிங்கப்பூரில் கிருமி தொற்றியோரின் மொத்த எண்ணிக்கை 29,364 ஆக உயர்ந்துள்ளது. இன்று அறிவிக்கப்பட்ட புதிய நோயாளிகளில் ஒருவர் சிங்கப்பூரர். முப்பது வயதான அவர், இந்நோயால் பாதிக்கப்பட்டதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பீஷான் எம்ஆர்டி நிலைய ஊழியரின் குடும்ப உறுப்பினர். 

சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமிப் பரவல் கட்டுப்பட்டு வருவதற்கான அறிகுறிகள் அண்மையில் தென்பட்டு வருகின்றன. 
கடந்த வாரத்தில் இந்நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை, புதிய நோயாளிகளின் எண்ணிக்கையை விட அதிகம். 

நேற்று வரையில் 36 விழுக்காட்டினர், அதாவது 10,365 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர். அத்துடன், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி பத்து பேர் மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். கிருமி பரவல் தடுப்பு நடவடிக்கை காலத்திலிருந்து இதுவே ஆகக் குறைந்த எண்ணிக்கையாகும். 

சமூக அளவில் சென்ற வாரம் சராசரியாக நாளொன்றுக்கு மூவர் மட்டுமே பாதிக்கப்பட்டனர். முந்தைய வாரம் இந்த எண்ணிக்கை 6ஆக இருந்தது.

சுகாதார அமைச்சின் புள்ளிவிவரப்படி, தங்கும் இடங்களில் வசிக்கும் 323,000 ஊழியர்களில் 8 விழுக்காட்டுக்கும் சற்று அதிகமானோருக்கு, 26,541 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இதுவரையில் கொரோனாவினால் 22 பேர் உயிரிழந்தனர்.
உலகளவில் கொரோனா கிருமிப் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்டது. இக்கிருமியினால் 4.9 மில்லியனுக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 323,000 பேர் உயிரிழந்தனர்.