இணையம் வழி கனிவன்பு தின உணர்வுப் பகிர்வு

கொரோனா கிருமித்தொற்று காரணமாக பாதுகாப்பு இடைவெளி விதிமுறை நடப்பில் இருந்தாலும், கனிவன்பையும் நன்றியுணர்வையும் எந்த இடத்திலும் வெளிப்படுத்தலாம் என்று சிங்கப்பூர் கனிவன்பு இயக்கம், நேற்று அனுசரிக்கப்பட்ட முதலாவது மெய்நிகர் சிங்கப்பூர் கனிவன்பு இயக்கத்தின்போது தெரிவித்தது.

2013ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், நன்றியுணர்வை வெளிப்படுத்த சிங்கப்பூரர்களை ஒன்றிணைத்தது. இதன் மூலம் சிங்கப்பூர் ஒரு கனிவன்பு தேசமாகப் பிரபலப்படுத்தப்பட்டது.

அந்த வகையில் இந்த ஆண்டின் இயக்கம், லாபநோக்கமற்ற அமைப்புகள், உணவு பானத்துறையின் ஊழியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் உட்பட கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள வீரர்களின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பியுள்ளது.

இம்மாதம் 18ஆம் தேதி முதல் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் பயனாளர்கள், உண்மை நிலவரத்தை மேம்படுத்திக் காட்டும் வகையில் சிங்கப்பூர் கனிவன்பு இயக்கத்தின் இணையப் பக்கத்துக்குச் சென்று அங்கு ‘நன்றி’, ‘உங்களை வரவேற்கிறோம்’ போன்ற வாசகங்களுக்கு ஏற்ற சிங்கப்பூர் சைகை மொழியைப் பதிவு செய்யலாம்.

மேலும் பொதுமக்கள் தங்கள் சமூக ஊடகப் பக்கங்களில் பிரகாசமான உடைகளை அணிந்து எடுக்கும் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்யலாம். இம்மாதம் 21ஆம் தேதி முதல் ஜூலை 19ஆம் தேதி வரை, சிங்கப்பூர் கனிவன்பு இயக்கத்தின் இணையத் தளத்தில் இடம்பெற்றுள்ள நடன சவாலில் பங்கேற்கலாம்.

மேலும் தலைமுறைகளுக்கிடையிலான பிணைப்பை வலுப்படுத்த சிங்கப்பூர் கனிவன்பு இயக்கம், 50,000 கனிவன்புப் பொட்டலங்களை இல்லங்களுக்கு விநியோகம் செய்யும்.

நேற்று நடைபெற்ற சிங்கப்பூர் கனிவன்பு இயக்க மெய்நிகர் நிகழ்ச்சியில் பங்கேற்ற தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன், “கொவிட்-19 காலகட்டத்தில் அனைவரது சுகாதாரத்தைப் பேணும் நோக்கத்தில் நமக்கு பழக்கப்பட்ட வெளிப்புற நடவடிக்கைகளை நாம் தவிர்த்து வருகிறோம். ஆனால், இது நமது கனிவன்பை வெளிப்படுத்தும் போக்கை மாற்றி விடக்கூடாது. நேரடியாக இல்லாவிட்டாலும் மெய்நிகர் நிகழ்ச்சி வழி நாம் நமது கனிவன்பையும் நன்றி உணர்வையும் வெளிப்படுத்த வேண்டும்,” என்று கேட்டுக்கொண்டார்.

இத்தகைய நெருக்கடி காலத்தில் கனிவன்பை வெளிப்படுத்தும் இதுபோன்ற பண்புகள் நமது ஒற்றுமையைப் பன்மடங்கு அதிகரிக்கும்,” என்றும் அமைச்சர் ஈஸ்வரன் கூறினார்.