கம்ஃபர்ட்டெல்குரோ ஓட்டுநருக்கு 50% வாடகை

கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனத்தின் டாக்சி ஓட்டுநர்களுக்கான முழு வாடகைத் தள்ளுபடி அடுத்த மாதம் முடிகிறது.  ஜூன் 2 முதல் அந்த நிறுவனத்தின் டாக்சி ஓட்டுநர்கள் வழக்கமான வாடகையில் பாதியைக் கட்டவேண்டும்.

இதைக் கணக்கிட்டுப் பார்க்கையில் நாள் ஒன்றுக்கு வாடகைத் தள்ளுபடி, வாகனத்தின் வயது, வகை, அதைத் தயாரித்த நிறுவனம் ஆகியவற்றைப் பொறுத்து $45 முதல் $86 வரைப்பட்டதாக இருக்கிறது.

“பலரும் வீட்டிலிருந்தே வேலை பார்த்து வருகிறார்கள். பெரும்பாலான தொழில்கள் இன்னமும் மூடியே கிடக்கின்றன. டாக்சி தேவை கொஞ்சம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அது இப்போதைக்கு வழமை நிலைக்குத் திரும்பாது என்றே தெரிகிறது,” என்று கம்பர்ட்டெல்குரோ டாக்சியின் தலைமை நிர்வாகி ஆங் வெய் நெங் தெரிவித்தார்.

இதற்கிடையே, பாதி வாடகை தள்ளுபடி அவ்வளவாக உதவாது என்று ஹென்றி டே என்ற டாக்சி ஓட்டுநர் கூறினார்.

பலரும் டாக்சியைத் திருப்பி ஒப்படைத்து விடுவார்கள் என்றார் அவர்.

“வாடகை டாக்சியை ஓட்டி இப்போது ஒரு நாளில் $40 முதல் $50 வரைத்தான் சம்பாதிக்க முடிகிறது. செலவை ஈடுசெய்ய விநியோக வேலையும் பார்க்கிறேன். இப்போதெல்லாம் டாக்சிக்கு முன்பதிவு எதுவும் இல்லை. மக்கள் வெளியே வந்து கையை நீட்டினால் போதும் டாக்சி கிடைக்கிறது,” என்று ஹென்றி டே தெரிவித்தார்.